Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, June 26, 2011

ஒரு பருந்தும்... பல காகங்களும்...




கதிரவன் எல்லையில் மேலெழ
காக்கைக் கூட்டமொன்று நகர்கிறது
தனியே தன் கூட்டிலிருந்த பருந்தொன்றை
திட்டமிட்டு தாக்குகிறது..

பருந்து இதை எதிர்பார்திருந்தது - ஆனால்
இந்த தனிமையை இல்லை
புரியாத மொழி பேசும் காக்கைகளுடன்
தன் மொழி பேசும் காக்கைகளும் கண்டு
திகைத்து நின்றது - புன்முறுவலுடன்
கருங்காக்கைகளுடன் - ஓரத்தில்
பல வௌ்ளைக் காகங்களும் நின்றது
கண்டு புரிந்த நின்றது - பருந்து

எண்ணிக்கையில், பலத்தில் மேலெழுந்த
காக்கைக்கூட்டத்தின் முன்
பருநதின் நிலை தோல்வியை நோக்கியது..
கொண்டு குணமும் - கொதிக்கும் இரத்தமும்
கொண்ட பருந்து - அன்று
நில்லாமல் போராடியது - தம்
எண்ணிக்கைக்கு எட்டமுடியாத
காக்கைகளை விரட்ட முற்பட்டது..

தன்னைக் காக்க தன் சகோதரர்
வருவர் என்று தனித்திருந்தது
பாவம் அன்று தெரியவில்லை - தன்
சகோதரர் என்றிருந்தது - பருந்துகளல்ல
நரிகள் என்று..

பருந்தின் இறக்கை தாக்கப்படுகிறது
மூர்க்கத்னத் தாக்குதலில்
கண்பறிக்கப்படுகிறது
போராடியது - விடாமல்
போராடியது...
வீரம் உதிரச் சொத்து அதற்கு

இறுதியில் பருந்து வீழ்த்தப்படுகிறது
தோற்றம் சிதைக்கப்படுகிறது.....
வீரவெற்றி பெற்றதாக கரைந்துகொண்டே
காகங்கள் பறந்து செல்கின்றன

முடிவில்..
பருந்தின் சிதையாத
கூட்டிலிருந்து சில பருந்துக் குஞ்சுகள்
கண் திறக்கின்றன....

-மோனி..




Sunday, June 19, 2011

தமிழா...!! உனக்கிந்த குரல் கேட்கவில்லையா...??




யாரோ கூப்பிடும் குரல் கேட்டு
விழித்துக் கொண்டேன்

அரை நித்திரையிலிருந்து
யாரோ என்னை கூப்பிடவதுபோலிருந்தால்
விழித்துக்கொண்டேன்

அபயத்தின், வலியின்,
மரணத்தின், கோபத்தின்
அழைப்பின் குரலது..

குரலின் சொந்தம் தேடி
ஊரும் இடமும் தேடினான்
யாரும் புலப்படவில்லை

மீண்டும் புரண்டு புரண்டு படுத்தேன்
அதே குரல் மீண்டும் கேட்டு
மீண்டும் விளித்துனக்கொண்டனே்..

புரிகிறது, அந்த குரல்
வெளியிருந்தல்ல - என் உள்ளிருந்து
கேட்கிறது..

தமிழா...!! உனக்கிந்த குரல் கேட்கவில்லையா...??

-மோனி..


Monday, May 16, 2011

மூத்த தமிழனுக்கு...




தமிழில் முக்குளித்து
மந்திரமொழி உரைத்து

தமிழ்பெற்ற மூத்த மகன்
என்றிருந்தோம் உன்னை.

பதவிதனைத் துறந்து - தம்பி
உயர் குடித்த - பாசிச
வெறி பிடித்த - கயவர்
இருக்கை வேரறுத்து - வருவான்
என்றிருந்தாள் தமிழ் அன்னை..

கற்பைப் பறிகொடுத்து
கதறினாள் தமிழ்ப்பெண் இங்கே
பதவி வெறி பிடித்து
மதியது தறி கெட்டு
உணராமல் இருந்தாய் நீ அங்கே..

கால் மேல் கால் போட்டு
எக்காளம் தான் கொண்டு
இருக்காதே என்றுரைத்தோம்
அன்று - இன்றுன்
நரித்தோல் உரித்து
வஞ்சகந்தான் வெறுத்து
துாக்கி எறிந்துவிட்டனர்
உன்னவர் அங்கே...

இன்றுவந்த 'அவள்' ஒன்றும்
தேவதை இல்லைதான் எமக்கு - இனி
எம் மூக்கு போனாலும் சரி - உன்
சகுனம் பிழைத்தால் போதும்..

தமிழனைப்புதை்துவிட்டாய் - அவன்
கனவுகள் தூங்கவில்லை - புதைகுழிகளும்
கதை சொல்லும் - நாம் மீண்டோம்
என்று வரலாறுதான் சொல்லும்

ஆலமரத்திற்கு வித்திட்டிருக்கிறோம - அது
விருட்சமாய் வளர காவல் நிற்போம்
பின்னை அதை அழிக்க - இனி
யாராலும் முடியாது...

-மோனி..




Friday, May 6, 2011

மன்மத தகனம்...(கவிதை)




(ஆத்திகர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.. இங்கு கடவுளரை நான் கிண்டல் செய்யவில்லை.. இவை வெறும் குறியீடுகளே..)

தேவலோகத்தில் ஒரே சத்தம்..
வார்த்தைகளின் வாதம்..
காதில் விழுந்த ஓசைகள்
உதட்டில் தெறித்தன..

வழக்கம் போலதான்..
கதை ஒன்று
கதாபாத்திரம் வேறு
யார் பெரியவன் என்ற சண்டை
மன்மதனுக்கும் சிவனுக்கும்

சிவன்..
'உன்னை என் பார்வையில் எரித்தேன்..'
மன்மதன்
'இருந்தும் உம்மை வென்றேன்..'

சாட்சிகள் அழைக்கப்பட்டனர்...

பிரம்மாவும் விஷ்ணுவும் கூண்டேற்றபட்டார்கள்
சாட்சியாக சத்தியம் கூற
'நான் அடியைக் கண்டேன்..'
என்று பிரம்மா
'நானும் முடியைக் கண்டேன்..'
என்று விஷ்ணு

பொய்மையோடு
மன்மதனின் பக்கம் ஓங்கி வந்தது
வாய்மையோடு
சிவனின் பக்கம் தாழ்ந்து சென்றது

இந்திரன் 'சிவன் பிச்சை எடுத்தான்..'
சனி 'நான் அவனை பிடித்தேன்..'
என்றான்..
'இவன் பித்தன்..','பேய்களுடன் ஆடுபவன்..'
குரல்கள் ஒலித்தது...
கோபம் பொறுமையின்
எல்லை கடந்தது...

உண்மையின் வேகம்
சிவனின் கோபமாய்...
நெற்றிக் கண் கனல எரிந்தான்
மன்மதன்..
இந்த முறை மீள முடியாமல்

நிசப்பதம்...
தேவ கூட்டம் கலைந்தது


இனி...
பாவம் உமாதேவியார்...

-மோனி...


Sunday, May 1, 2011

கனவாய்ப்போகுமோ என்று...




லையும் உயிர்கள் வாழும்
பூமியிது பெருவெளியாம் - நிலை
குலையும் நாங்கள் வாழும்
வாழ்க்கை ஒரு சிறு சிறையாம்

ருவறை சிறை - போனபின்
கல்லறைசிறை - தோல்வியால்
இலட்சியம் சிறை - வெற்றிக்குப்பின்
அலட்சியம் சிறை - நாமில்
நான் சிறை - பூமிக்கே 
வான் சிறை...


வாழும் பிறப்பிது - ஒரு
முறைதான் - அதில்
உருவாக்கும் சிறைகள்தான்
எத்தனையோ..??

ன்றொரு நாள்
நாமிலொரு நீ போகும் - குடும்ப
வாழக்கையின் துயர்தேடி
நானும் போக விரும்புகிறேன் - தேடாத
வாழ்க்கையின் வேர்தேடி



வாழ்ந்திட துடிக்கிறேன் - தினமொரு
முறை பிறந்திட நினைக்கிறேன் - ஆனால்
நிதமும் பதைக்கிறேன் - கனவென
இவை ஆகுமோயென்று....


-மோனி...





Tuesday, April 26, 2011

என் சிறு கவிதைகள்...





(இது நான் எழுதி சிறு கவிதைகளின் ஒரு சிறு தொகுப்பு...)

கடைக் கண்ணாடிகளில் 
விழுமெம் விம்பத்தை 
இரசிக்கிறோம்...
எம்மை விட 
அதிகமாக...
---------------------------------------------------------------------
பூமியில் உள்ளதாடா சொர்க்கம்
அடக்கி வைத்த மூத்திரத்தை
பெய்து பார் - அப்போது தெரியும்...
---------------------------------------------------------------------

அம்மாவை விடவும்
சொர்க்கமொன்று உண்டென்றால்
எவ்வளவு உன்னதமானது
அது...
---------------------------------------------------------------------
அண்ணாந்து வானம் பாரத்து 
நிம்மதியடைகிறேன் - இன்னமும்
மேலே இடம் உள்ளது...
---------------------------------------------------------------------
'இதுவும் போய்விடும்...' என்றெழும்
கவிஞனும் காசுக்குத்தான்
எழுதுகிறான்.....





Friday, April 15, 2011

என் கவிதைகள்...




என்ன சொன்ன போதிலும் - அதை
                          சொல்ல தகுதியில்லை என்கிறீர்
நீ எப்படிச் அதைச் சொல்வாய் என்றோ
                          ஏளனம் தன்னை பேசுகின்றீர்
முன்னம் செய்ததெல்லாம் - இவன்
                          மறந்துவிட்டான் என்கின்றீர்
பின்னம் செய்யப்போவது இதுவென்று
                          அடித்து உரைக்கின்றீர்
எண்ணம் இவனது சாக்கடை - இவன்
                          எதுக்கும் உதவானென்கின்றீர்
அறிந்ததேனென்றேன் அகம்பாவமென்றீர்
                          அறியவில்லையென்றேன் அறிவிலியென்றீர்
புரிந்தேனனென்றேன் வெறுங்கூச்சலென்றீர்
                          புரியவில்லை என்றால் உட்கூடென்றீர்
நான் சொன்னது என்னைதான்
                        சொல்லுகிறேனென்று புரியவில்லை உமக்கு
சொல்வதை நிறுத்திப் பார்த்தேன் - உம்
                           சொல் 'வதை' முடியவில்லை
நானும் மீண்டும் ஆரம்பித்துவிட்டேன
                           என் வாழ்க்கை எதுவென்றறிந்து.....

-மோனி...



Thursday, March 31, 2011

நானும் 5 star ஹோட்டலுக்கு போயிருந்தேன்....




கண்ணாடியா? தரையா?
ஏழைவிட்டு கண்ணீர்
கழுவியதா....???
வாய்பிளந்து தலைகுனிந்து
முகம் பார்த்து
பெருமூச்சுவிட்டேன்...
"நல்ல காலம் சாரம் கட்டவில்லை.."
என்று...

அமர்ந்தேன், நண்பன் அருகில்
"Good morning sir.."
அண்ணாந்து பார்த்தேன்
சற்றும்ஒட்டாத புன்னகை
அவன் முகத்தில் ஒட்டியிருந்தான்
மட்டை கொடுத்தான்
மடிக்காமல் வாங்கி வாசித்தேன்

சோளக்கூழில் மிளகாய் தேடுபவன்
நகரத்திற்கு வந்து அண்ணாந்ததை போல
புரட்டிப் பார்த்தேன், தலைகீழாய் பார்த்தேன்
புலப்படவில்லை, புரியாமலே
கோழி பெயர் போட்டதை
கோடிட்டு காட்டினேன்

வரும் வரைக்கும் அங்கும் இங்கும்
வாய் பார்த்தேன்
எல்லாரும் மென்று முழுங்கிறார்கள்
எவனும் இரசிக்கவில்லை
"புசிக்க இரசிக்க மறந்த மனிதன்
மரித்தே வாழ்கிறான்.."
இவர்களுக்கு
இரங்கல் அறிக்கை
இரைந்து கொண்டிரருக்க

பளிச்சிடும் பாத்திரத்தில்
பரிமாறினான்
இரும்பு இரண்டு கொடுத்தான்
இருகை நீட்டி வாங்கினேன்
கைபிசைந்து சாப்பாட்டை
கைமா பண்ணணி சாப்பிடுவதில்
உள்ள சுகம் இவ் வையத்தில்
உளதோ... ?? என்றெண்ணி
கொடுத்த இரும்பை கடாசிவிட்ட
கொண்டு வந்த சாப்பாட்டில் கை வைத்தேன்
அருகில் இருநத்தவன்
அவன் கிட்னியை யாரோ
திருடியது போல என்னை
தின்று பார்த்தான்

சாப்பாட்டை
கடித்தேன் கரைந்து
உறிஞ்சினேன் உருகியது
உப்பில்லை உறைப்பில்லை
ஒடியற் கூழ் குடித்தால்
ஓடி வருமாம் ஆனந்த கண்ணீர்
எனக்கும் வந்த்து கண்ணீர்
என் நிலை எண்ணி வந்த துக்க கண்ணீர்

மென்று தின்று
முக்கி முனகி
சாப்பிட்டு முடித்து
சற்றே வெளியே வந்து

எனக்குள்
சிலாகித்தேன்
"அம்மா உன் கருவாட்டு
குழம்பும் புட்டும்
ஒரு கோடி தேறும்...."

-மோனி...


Sunday, March 6, 2011

காதல் கடிதம்...




அன்புள்ள காதலிக்கு,

கண்ணீரால் இதை எழுதவில்லை
உதிரத்தால் நிறத் தீட்டவில்லை
உணர்வுகள் கொண்டு நிரப்பவில்லை
வலியால் துவண்டு கரையவில்லை

இது வெறும் கடிதம்
இதில் என்ன தெரியப் போகிறது

வார்த்தைகளில் தெரிவதில்லை அம்மா
உள்ளங்களின் ஆழம்
மெளனத்தில் கூட புரிந்துவிடுமடி
உண்மைக் காதல்

உன்னை மறந்து போகவுமில்லை
அல்ல - நினைத்தே
உருகிப் போகவும் மாட்டேன்

நிழலாய் மாறுமுன்
நினைவுகளின் - வாசலினின்று
அழுது உருகுகிறேனென்று
பொய் சொல்லவுமில்லை

இது வெறும் கடிதம்
இதில் என்ன தெரியப் போகிறது

கடிதங்கள்
துாரங்களின் அடையாளங்கள்
நேசங்களின் அலங்காரங்கள்
"என்றும் என்னோடு இருக்கும்
உனக்கு எது இதற்கு?"  என்று
கவிதையில் பொய்யும்
சொல்லப் போவதில்லை

சுற்றும் முற்றும் பார்க்கிறேன்
உன்னைத்தான் காணவில்லையே

நீ என்னுள் தந்த காயங்களை
இரசிக்கிறேன்
நிரப்பி வழித்த சோகங்களை
நேசிக்கிறேன் - என்று
வைரமுத்துவாய் காசிற்கு
புழுகவும் மாட்டேன்

நீ இல்லையென்றால் செத்துவிடுவேனென்று
முட்டாளாய்
உன் நினைவுகளில் வாடி மடியும்
பித்தனாய்
நிச்சயமாய் வாழமாட்டேன்

திரும்பும் இடமெல்லாம்
உன் நினைவுதான் என்று
பிதற்றவும் மாட்டேன்

உன்னை இழந்த சோகத்தில்
தாடியும் கையில் சாடியுமாய்
உன் மேல் சத்தியமாய் போகமாட்டேன்

சாதிக்க இலட்சியங்கள்
நூறு உண்டு எனக்கு

இது வெறும் கடிதம்
இதில் என்ன தெரியப் போகிறது

என்னதான் சொல்லவருகிறான்
இவன் என்கிறாயா..??
நீ நெஞ்சில் பூத்துவிட்டாய்
இனி அது உதிராது

நான் கடந்து போகிறேன்
உ்ன் மேல் கொண்ட காதலுடன்

என்னோடு வருவதும்
இல்லை போவதும்
உன்னோடுதான்

அன்புடன்.
காதலன்

இது வெறும் கடிதம்
இதில் என்ன தெரியப் போகிறது

-மோனி...

Saturday, March 5, 2011

திறந்தே வை....




வழிதவறி -  உன் வீட்டு
வழிஅறிந்தே
வாசல் வந்தேன்...

குணம் கெட - உள்ளும்
மனமும் கெட்டு
உன் அணையை
தேடிவந்தேன்...

கேட்ட அடையாளம் சரி
பெயர் மாற்றிவிட்டாய் போல
உனக்கும் அதன் தேவைதான் என்ன...??
எனக்கும் அதன் தேவைதான் என்ன..??

கொடுக்க விலை - தெரியாது..
காசில்லாவிட்டால்...
கடவுளிற்கும் கதவுசாத்துவாய்
நீ..

அத்தோடும் சேரத்து
பையில் இரண்டும் உண்டு

கதவைத் திறந்தே வை...

- மோனி..

Tuesday, February 22, 2011

கவிதை...??..




மின்னல்களைப் பிடித்து
கூண்டுக்குள் இட்டுவிட்டேன்
மின்மினி ஔிகண்டு
இருளிற்கு ஓடுகிறேன்...

வானத்தை எடுத்து
கைக்குட்டை செய்துவிட்டேன்
வழிந்தோடும் வியர்வையில்
மூழ்கித் தத்தளிக்கிறேன்

வானவில்லின் மேலேறேி
வர்ணங்கள் மாற்றிவிட்டேன்
அகரம் விளங்காமல்
தகரமாய் தவிக்கிறேன்

சமுத்திரத்தைப்பிடித்து
செம்பிற்குள் அடைத்துவிட்டேன்
சதுரங்க கட்டைகளிற்குள்
மாண்டு விழிக்கிறேன்

கடவுளைக் கண்டு
விட்டேன்
கவிதை...???

- மோனி

போகும் வழியில்..




சிரித்தான்..
நானும் பதிலுக்கு..
எங்கேயோ கண்ட முகம்
"என்னை ஞாபகம் இருக்கா..??"
என்ற அவனது கேள்வி
"உங்களை ஞாபகமில்லாமலா"
என்ற எனது பதிலோடு
ஏதேதோ கேள்விகேட்டோம்..
என்னென்னவோ விடை சொன்னோம்..
வாழ்க்கை அழைத்துவிட
பிரிந்து போகும் போது
முய்ற்சித்தேன்
அவனது பெயரை ஞாபகப்படுத்த...

-மோனி..