Thursday, May 5, 2011

ஒசாமாவின் மரணம் - உலக அரசியல், பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள்...





செப்டம்பர் 11 உடன் ஒசாமா என்ற ஒரு தனிமனிதன் இந்த உலகத்தின் போக்கையே தலைகீழாக திருப்பிப்போட்டான். அதுவரை தங்களை உலகத்தின் வல்லரசு என்று மார்தட்டி வந்த அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அடித்தான். அமெரிக்காவின் பாதுகாப்பு. பொருளாதாரம், புலனாய்வு  என்று மூன்று தூண்களை அடித்து நிலைகுலையச் செய்தான்.


பதிலடி கொடுக்க வேண்டும் என்று 'பயங்கரவாதம் மீதான போர்' என்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சொற்பதத்துடன் ஜோர்ஜ் புஷ் முஸ்லீம் தேசங்கள் மீது தங்கள் ஏகாதிபத்திய வெறியை வெளிக்காட்டினார்கள். சந்தர்பத்திற்கு காத்திருந்து பாய்ந்தது போலவே அந்த யுத்தங்கள் காணப்பட்டது என்பது வெளிப்படை உண்மை. மீண்டும் ஒரு உலகப்போர் தொடங்கும் என்று எதிர்பாரக்கப்பட்ட போது பல முதுகு குத்தல்கள் மூலம் அது இல்லாமல் போனது. முதலில் ஆப்கானிஸ்தான், பிறகு ஈராக் என்று தங்கள் தாக்குதல்களை தொடுத்தார்கள். பின் ஈரான் மீது ஒரு யுத்தம் தொடுப்பது போல பாவனையை ஏற்படுத்தினார்கள்.


இராணுவ படையெடுப்புக்கள் அவர்கள் எதிர்பார்த்து போல இருக்கவில்லை. எதிரிகள் பின்வாங்கி வளங்களை பாதுகாத்துக் கொண்டு மக்களின் பலத்தை வைத்து சிறு சிறு தாக்குதல்களை நடத்தினார்கள். ஒரு சில முஸ்லீம் நாடுகள் அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் பக்கம் நின்றாலும் பல நாடுகள் அமெரிக்க எதிர்ப்பு சக்திகளுக்கு நேரடியாவோ மறைமுகமாகவோ உதவி வந்தார்கள். 


இதனிடையில் அமெரிக்கா பொருளாதாரம் வரலாறு காணாத பெரும் வீழ்ச்சியைக் கண்டது. எத்தனையோ அமெரிக்கா கம்பெனிகள் பாங்கரப்ட் ஆகின, மக்கள் வேலை இல்லாமல் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டார்கள். இந்த பொருளாதார வீழ்ச்சி உலகத்தில் உள்ள எல்லா நாடுகளையும் ஒரு ஆட்டு ஆட்டியது. ஆனால் ஆச்சரியப்படும் வகையில் இந்தியா இதில் பாரிய சேதங்களை சந்திக்காமல் தவிர்த்துக் கொண்டது. இதுவே பின்பு தெற்காசிய பிராந்தியத்தில் மாற்றத்தை கொண்டு வந்தது.

இராணுவ தோல்வி, மக்கள் நேரடி எதிர்ப்பு, பொருளாதார வீழ்ச்சி, வேலைவாயப்பில்லாமை என்று அமெரிக்க வல்லரசு ஆட்டம் கண்டது. அதுவரை உலகத்திற்கே கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருந்த நிலை போனது. அதன் விளைவு "பிராந்திய வல்லரசு" என்ற நிலை ஏற்பட்டது. 

என்ன இந்த பிராந்திய வல்லரசு..?? அதாவது உலகத்தின் ஒவ்வொரு பிராந்தியங்களிலும் ஒவ்வொரு பலம் வாய்ந்த நாட்டின் ஆதிக்கம் ஓங்கி வந்தது. தெற்காசியாவில் பாகிஸ்தானின் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற அல்லாடியதால் இந்திய பலம் ஓங்கியது. இதுதான் விடுதலைப்புலிகளின் தோல்விக்கும் இலங்கையில் வித்திட்டது என்பது வெளிப்படை. சீனா, ரஷ்யா என்று நாடுகள் தங்கள் பலங்களை மெல்ல மெல் வெளிப்படுத்தியது. இதில் முக்கியமான நிகழ்வு 2008ஆம் ஆண்டு ஜோர்ஜியா மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்.

உலக அரசியல் அரங்கில் அதிர வைத்த இராணுவ நடவடிக்கை இந்த படையெடுப்பு. ஜோர்ஜியா அமெரிக்காவின் கைப்பொம்மை என்பதும் ரஷ்யாவை கண்காணிப்பதற்கு அமெரிக்காவின் அவுட்போஸ்ட் என்பதும் வெளிப்படை. ஜோர்ஜியாவின் அரண்களை 2 மணி நேரங்களில் தகர்த்து உள் நுழைந்த ரஷ்ய இராணுவம் இந்த உலகத்திற்கு ஒரு செய்தியை அனுப்பியது.

அமெரிக்காவின் கைப்பிடி மெல்ல தளரந்து வரும் போதுதான் பராக் ஒபாமா அமெரிக்க அதிபரானார். அமெரிக்காவின் சரித்திரத்தை மாற்றிப்போட்ட நிகழ்வு - கறுப்பினர் ஒருத்தர் அதிபரானது.  அவரை ஒரு கறுப்பு தேவதையாக சித்தரித்தார்கள். எதிரி நாடான கியூபாவுடன் கைகோர்த்தல். அதுவரை எதிரியாக இருந்து வெனிசுவேலா ஹகோ சார்வேஸ் உடன் கைகுலக்கல், படைகளை திரும்ப பெறல், திரும்ப பாரக்க வைக்கும் பொருளாதார சீர்திருத்தங்கள் என்று அமெரிக்கா மேடையை அதிர வைத்தார்.


இவருடைய பொருளாதார சீர்த்திருத்தங்கள் இவரின் மீது இருந்த செல்வாக்கை குறைத்து சென்றது. ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் அமெரிக்காதான் தனக்கு முக்கியம் என்ற போர்வையில் அவர் செய்த ஆட்சி அமெரிக்க வரலாற்றில் ஒரு புது நாடகம்.

ஆனால் அமெரிக்காவின் கை மீண்டும் மெல்ல மெல்ல அரசியல் அரங்கில் ஓங்கி வரத்தொடங்கியது. அதுவரை அதளபாதாளத்தில் சென்றுகொண்டிருந்த பொருளாதாரத்தின் வீழ்ச்சி இழுத்து நிறுத்தப்பட்டது. எகிப்திய புரட்சி, சூடான் வீழ்ச்சி, கடாபியின் பின்வாங்கல் என்று உலக அரசியலே அல்லாடிக் கொண்டிருக்கும் போது...

சில சில இடத்தில் அமெரிக்கா மறைமுக காய்நகர்ததல்களின் மூலம் வெற்றிகளை கண்டுவந்த அமெரிக்காவிற்கு லட்டு மாதிரி வந்தது ஒசாமாவின் வீழ்ச்சி....


"Justice is done." என்ற ஒபாமாவின் அறிக்கையுடன் இனி உலக அரசியலில் ஒரு மாபெரும் மாற்றத்தை எதிர்பார்கலாம். அமெரிக்காவிடமிருந்து யாரும் ஔிய முடியாது என்று ஒபாமா எல்லா நாடுகளிற்கும் ஒரு செய்தியை கூறியிருக்கிறார். பின் லேடனின் வீழச்சியுடன் அல்கைதாவின் எதிர்காலமும் கேள்விக்குறி ஆகவிடும்...

பயங்கரவாதத்தின் மீது கடந்த தசாப்த காலமாக நடத்தி வந்த யுத்தம் ஒரு வழியாக ஓய்விற்கு வந்தவிட இனி அமெரிக்காவின் முழு கவனமும் சீனா மீது இருக்கும் என அரசியல் வல்லுனர்கள் எதிர்பார்கிறாரகள். ஒசாமாவின் மரணத்தை சீனா வரவேற்று அறிக்கை விட்டிருந்தாலும் அடிப்படையில் அவர்களுக்கு கெட்ட செய்தி. 

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை அமெரிக்காவின் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது உலக பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்களை எதிர்ப்பார்கலாம். அது சாதகமாவே அமையும்.

இதை விட தற்போது இந்தியா அரசியல் நெருக்கடி, ஜப்பான் இயற்கை அனர்த்தம், ரஷ்யாவில் புட்டினிற்கும் ரஷ்ய அதிபரிற்கும் இடையில் உள்ள அரசியல் குழப்பம் என்று மற்றை நாடுகளின் தள்ளாட்த்தை அமெரிக்கா தனக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்ளப் பார்க்கும்...


இதன் விளைவு .... "History Repeats Itself"

-மோனி...

(இந்தக் கட்டுரை எழுதுவதற்குரிய அறிவு எனக்கில்லை. நான் இதுவரை வாசித்த தகவல்களின் திரட்டி கொஞ்சம் பகுத்தறிவு கலந்தது..)



4 comments:

  1. //இந்தக் கட்டுரை எழுதுவதற்குரிய அறிவு எனக்கில்லை. நான் இதுவரை வாசித்த தகவல்களின் திரட்டி கொஞ்சம் பகுத்தறிவு கலந்தது.//
    இது உங்கள் தன்னடக்கத்தினை காட்டுகிறது.
    ஆனால்,
    எல்லோரும் பின்லேடனை அமெரிக்கா வீழ்த்தியது எப்படி? கொல்லப்பட்டது உண்மையில் பின்லேடன் தானா? என்பதில் ஈடுபட்டிருக்கும் போது அந்நிகழ்வின் மூலம் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்த உங்கள் கட்டுரை உங்களின் மாற்று சிந்தனை,மற்றும் திறமையை காட்டுகிறது.
    தொடருங்கள் மோகனரங்கன்.

    ReplyDelete
  2. நல்ல ஒரு ஆய்வு.. அமெரிக்கா எதிரிகளை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எதிரிகள் ஒன்று திரளாத வரை ஆட்டம் போடுவார்கள்...

    ReplyDelete
  3. நல்ல ஆய்வு மோகனரங்கன்... அத்துடன் இந்த தாக்குதல் பற்றி அமெரிக்கா மீதான விமரிசனங்கள் விரிகின்றன.. அவற்றை வைத்து மற்றொரு கட்டுரை வரையுங்கள்... அத்துடன் அமெரிக்கா மீதான கண்டனங்களை என்னால் முழுமையாக ஏற்க முடியவில்லை...

    ReplyDelete
  4. அனைவருக்கும் நன்றி...
    @மதுரகன் அண்ணா.. என்ன உள்ளடக்கத்தைக் கொண்ட கட்டுரை வரைய..

    ReplyDelete