Monday, July 11, 2011

வேசிக்கும் வேண்டாதவன்...




மக்கள் வணங்கும்
'சாமியார்' அவன்..
மாக்கள் அவர்களிற்கு
சாமி யாரென காட்டிட..

பரம்பொருள் அவனது
மகிமை பாடிட
பேரின்பப் பேருரை
புனைந்திட விரைந்தான்



எண்குணங் கொண்டு

மூவுலகம் கொள்ளும்
பரிணாமம் கடந்தவன்
உண்மை பாடிட

மும்மலங்களால் கட்டுண்டு
மானிட பாவம்
தனை நீக்கும் வழியொன்று
காட்டிவிட


பக்கங்கள் நிறைத்துச்சென்றான்
பலவரிகள் கிறுக்கிச் சென்றான்
பாவங்கள் கழுவிச் செல்லும்
பக்தி மார்க்கமொன்றை

உரை எழுதி முடிந்தவுடன்
மானிடப் பதர்தனை
உய்திட சொல்லிடுவேனெ்றான்
இதனை...

இவையனைத்தும் சொல்லிவிடும்
அவன்....
வேசிக்கும் வேண்டாதவன்....

-மோனி..

Friday, July 1, 2011

வவுனியாவில் நடை பெறவுள்ள Carnivelஐ புறக்கணிப்போம்....




இந்தப் பதிவு ஒரு வவுனியாவை(இலங்கை) சேர்ந்த நண்பர்களுக்கொரு கோரிக்கை...

வவுனியாவில் வழமைபோல இந்த மாதமும் வருகிற கிழமை Carnivel களியாட்டங்கள் நடைபெறவுள்ளன. அதற்கான அடுக்குப்படிகளும் தற்போது ஆரம்பித்துவிட்டது.... என்னுடைய கோரிக்கை இதை வவுனியா வாழ் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்...

 யுத்தம் முடிந்துவிட்டதென்று கூறி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது ஆனாலும் எங்கள் தாயக பூமியில் எங்கள் உறவுகள் இன்னும் நிராதரவாக்கப்பட்டே இருக்கிறார்கள். யாழ்குடாநாட்டில் இளவயது கருக்கலைப்பு அதிகரிப்பு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவிச் பெண்களிற்கு வேலை வாங்கித்தருவதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபடவைத்தல், எங்கள் உறவுகளை கொன்ற குவித்த நேரடிக் காட்சிகள் வெளியிடுவதல் என்று எங்கள் மக்கள் சீரழிவின் பாதையை நோக்கி பயனித்துக் கொண்டிருக்கிறார்கள்...



இவர்களின் தேவைகளைத்தான் எங்களால் பூர்த்தி செய்யமுடியவில்லை, இவர்கள் கண்ணீர் விடும் போது நாங்கள் அதற்கு அமைதியாய் செவிமடுத்து ஆறுதல் கூறாவிட்டாலும் பரவாயில்லை.. இவர்கள் கண்ணீருக்கு மதிப்பளித்து அவர்களுக்கு எங்கள் அமைதிகளை பரிசளிப்போம்..

இந்தியாவிலே எங்கள் சகோதரர்கள் எங்களிற்காய் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்திருக்கிறார்கள் என்பதை மறக்கவேண்டாம்...

நான் அங்கே போனால் என்ன...?? குடியா முழுகவிடப்போகிறது என்று நினைக்கும் சகோதரர்களே... இதே போன்ற நிலையை ஓர் நாள் எங்களுக்கும் வரலாம்.. அப்போது எங்களுக்காய் கண்ணீர்விட உறவுகள் வேண்டும்...

இல்லை நாங்கள் போவோம் என்று நீங்கள் எண்ணினால்.. நிச்சயமாக தமிழ் அன்னை உங்களை வாழ்த்தி அனுப்புவாள்..

இந்த கருத்தை சொல்வதற்கு எனக்கு தகுதியில்லை அல்லது இந்தப் பதிவு  தனிமனித சுதந்திரத்தை மீறியது என்று நீங்கள் கருதினால்... தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்...

Sunday, June 26, 2011

ஒரு பருந்தும்... பல காகங்களும்...




கதிரவன் எல்லையில் மேலெழ
காக்கைக் கூட்டமொன்று நகர்கிறது
தனியே தன் கூட்டிலிருந்த பருந்தொன்றை
திட்டமிட்டு தாக்குகிறது..

பருந்து இதை எதிர்பார்திருந்தது - ஆனால்
இந்த தனிமையை இல்லை
புரியாத மொழி பேசும் காக்கைகளுடன்
தன் மொழி பேசும் காக்கைகளும் கண்டு
திகைத்து நின்றது - புன்முறுவலுடன்
கருங்காக்கைகளுடன் - ஓரத்தில்
பல வௌ்ளைக் காகங்களும் நின்றது
கண்டு புரிந்த நின்றது - பருந்து

எண்ணிக்கையில், பலத்தில் மேலெழுந்த
காக்கைக்கூட்டத்தின் முன்
பருநதின் நிலை தோல்வியை நோக்கியது..
கொண்டு குணமும் - கொதிக்கும் இரத்தமும்
கொண்ட பருந்து - அன்று
நில்லாமல் போராடியது - தம்
எண்ணிக்கைக்கு எட்டமுடியாத
காக்கைகளை விரட்ட முற்பட்டது..

தன்னைக் காக்க தன் சகோதரர்
வருவர் என்று தனித்திருந்தது
பாவம் அன்று தெரியவில்லை - தன்
சகோதரர் என்றிருந்தது - பருந்துகளல்ல
நரிகள் என்று..

பருந்தின் இறக்கை தாக்கப்படுகிறது
மூர்க்கத்னத் தாக்குதலில்
கண்பறிக்கப்படுகிறது
போராடியது - விடாமல்
போராடியது...
வீரம் உதிரச் சொத்து அதற்கு

இறுதியில் பருந்து வீழ்த்தப்படுகிறது
தோற்றம் சிதைக்கப்படுகிறது.....
வீரவெற்றி பெற்றதாக கரைந்துகொண்டே
காகங்கள் பறந்து செல்கின்றன

முடிவில்..
பருந்தின் சிதையாத
கூட்டிலிருந்து சில பருந்துக் குஞ்சுகள்
கண் திறக்கின்றன....

-மோனி..




Monday, June 20, 2011

எழுதிக்கொள் இதனை... நான் ஓர் தமிழன்...




('வாக்குமூலம்..' என்ற பாலஸ்தீனக் கவிதையை தழுவி நான் எழுதிய கவிதை இது...)

எழுதிக்கொள் இதனை
நான் ஓர் தமிழன்
எனது அடையாள அட்டையில் - மட்டுமே
'நான்' என்ற அடையாளம் கொண்டவன்
கோபமா உனக்கு..??

எழுதிக்கொள் இதனை
நான் ஓர் தமிழன்
எழுதும் எனது பெயரும்
போகவிருக்கும் சவப்பெட்டியும்
தவிர
ஒன்றும் இல்லை எனக்கு
ஆனாலும் - உன்
கருணை கேட்டு இரந்திட மாட்டேன்
உனக்கு முழந்தாளிட்டு பணிந்திடேன்
மாறாக - என்
பாதங்களில் இறந்துபோவேன்..


எழுதிக்கொள் இதனை
நான் ஓர் தமிழன்
கல் தோன்றி மண்தோன்றமுன்
தோன்றி
வெயிலும் சோலையும்
பாராட்டிய வீரமண்ணை
சேர்ந்தவன் நான் - என்
மரணங்கள் உன்
வெற்றியை கொன்றே செல்லும்


எழுதிக்கொள் இதனை
நான் ஓர் தமிழன்
என் கண்களைப்போலவே
என் தலைமயிரும் கறுப்பு
எனது விலாசம்,
மறுக்கப்பட்ட ஒரு தூாரத்து கிராமத்தில்
நீ கொண்டுவந்த குடியேற்றங்களால்
ஒதுக்கப்பட்ட குப்பைமேடு அது
அதன் தெருக்களுக்கு பெயரில்லை
வாழ்வுகளுக்கு நாதியில்லை
அங்கே வந்தென்னை கேள்
நான் என்று நாம் வருவோம்


எழுதிக்கொள் இதனை
நான் ஓர் தமிழன்
எனது நிலத்தை திருடினாய்
நீ
எனது சகோதரிகளை சூறையாடினாய்
நீ
எனது குழந்தைகளை கொன்றாய்
நீ
நீ  விட்டுவைத்தது இந்த
வனாந்திரம் மட்டுமே...

இவை அனைத்துக்கும் மேல்
இதனையும் எழுது - நான்
யாரையும் வெறுப்பவன் அல்ல
யாரையும் கொள்ளை அடித்தவன் அல்ல

ஆனாலும்- நீ
கவனம்
முடிவுகள் என்றுமே நிலையற்றது...

-மோனி..


Sunday, June 19, 2011

தமிழா...!! உனக்கிந்த குரல் கேட்கவில்லையா...??




யாரோ கூப்பிடும் குரல் கேட்டு
விழித்துக் கொண்டேன்

அரை நித்திரையிலிருந்து
யாரோ என்னை கூப்பிடவதுபோலிருந்தால்
விழித்துக்கொண்டேன்

அபயத்தின், வலியின்,
மரணத்தின், கோபத்தின்
அழைப்பின் குரலது..

குரலின் சொந்தம் தேடி
ஊரும் இடமும் தேடினான்
யாரும் புலப்படவில்லை

மீண்டும் புரண்டு புரண்டு படுத்தேன்
அதே குரல் மீண்டும் கேட்டு
மீண்டும் விளித்துனக்கொண்டனே்..

புரிகிறது, அந்த குரல்
வெளியிருந்தல்ல - என் உள்ளிருந்து
கேட்கிறது..

தமிழா...!! உனக்கிந்த குரல் கேட்கவில்லையா...??

-மோனி..


Monday, May 16, 2011

மூத்த தமிழனுக்கு...




தமிழில் முக்குளித்து
மந்திரமொழி உரைத்து

தமிழ்பெற்ற மூத்த மகன்
என்றிருந்தோம் உன்னை.

பதவிதனைத் துறந்து - தம்பி
உயர் குடித்த - பாசிச
வெறி பிடித்த - கயவர்
இருக்கை வேரறுத்து - வருவான்
என்றிருந்தாள் தமிழ் அன்னை..

கற்பைப் பறிகொடுத்து
கதறினாள் தமிழ்ப்பெண் இங்கே
பதவி வெறி பிடித்து
மதியது தறி கெட்டு
உணராமல் இருந்தாய் நீ அங்கே..

கால் மேல் கால் போட்டு
எக்காளம் தான் கொண்டு
இருக்காதே என்றுரைத்தோம்
அன்று - இன்றுன்
நரித்தோல் உரித்து
வஞ்சகந்தான் வெறுத்து
துாக்கி எறிந்துவிட்டனர்
உன்னவர் அங்கே...

இன்றுவந்த 'அவள்' ஒன்றும்
தேவதை இல்லைதான் எமக்கு - இனி
எம் மூக்கு போனாலும் சரி - உன்
சகுனம் பிழைத்தால் போதும்..

தமிழனைப்புதை்துவிட்டாய் - அவன்
கனவுகள் தூங்கவில்லை - புதைகுழிகளும்
கதை சொல்லும் - நாம் மீண்டோம்
என்று வரலாறுதான் சொல்லும்

ஆலமரத்திற்கு வித்திட்டிருக்கிறோம - அது
விருட்சமாய் வளர காவல் நிற்போம்
பின்னை அதை அழிக்க - இனி
யாராலும் முடியாது...

-மோனி..




Friday, May 6, 2011

சே, அசெஞ்சே.... தயவுசெய்து நிகராக ஒப்பிடாதீர்கள்.




இந்தப் பதிவு பலரது எதிர்க் கருத்துக்களைத தூண்டலாம்.. இது என் தாழ்மையான வேண்டுகோள் மாத்திரமே..

 
அண்மையில் பேஸ்புக்கில் சேயின் முகத்திற்கு ஜீலியன் அசெஞ்சேயின் முகத்தை மோர்ப் செய்து ஒரு புகைப்படத்தைக் கண்டேன்.. (கீழே காட்டப்பட்டுள்ளது..).. இதை உங்களில் பலரே கண்டிருப்பீர்கள்... 

இதை பலர் பகிர்ந்திருந்தது மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்தியது.. தயவுசெய்து சேயிற்கு நிகராக ஒப்பிடாதீர்கள்.. அது யாராக இருந்தாலும் சரி...

சே குவேரா, இந்த உலகத்தில் இன்னும் எத்தனையோ அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் நெஞ்சில் எரிந்து கொண்டிருக்கும் புரட்சித் தீ, தன் உயிரையே கொடுத்து அடிமைத்தனத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக குரல் கொடுத்தவன், மக்களிற்காள அப்பழுக்கற்ற தலைவன். பிறந்து ஊர் ஆர்ஜென்டீனா ஆனால் கியூபா, கொங்கோ, பொலிவியா என்று சர்வாதிகாரம் மக்களை நசுக்கிக் கொண்டிருந்த இடங்களிற்கு சென்று மக்களிற்காக மக்களோடு நின்று போராடினார். 

இளமையில் துடிப்பும், மனிதத்திற்கான விளிப்பும் கொண்டு மக்களின் விடியலிற்காய் பாடுபட்ட ஒரு தலைவன்.  அவர் நினைத்திருந்தால் ஆர்ஜென்டீனாவில் தன்னுடைய காதலுடன் மருத்துவராக இருந்திருக்கலாம்.  கடைசி கியூபாவில் கொடுக்கப்பட்ட அமைச்சர் பதவியில் சொகுசாக வாழ்ந்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் மக்களிற்காக போராடி மண்ணிற்கு விதைக்கப்பட்டான்... சுதந்திரம் என்ற விருட்சம் வளர...

அசெஞ்சே, மேற்கத்தையே ஏகாதிபத்தியத்தின் அதிலும் முக்கியமான உலகத்திற்கே கட்டப் பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் உண்மை வடிவத்தை தோலுரிக்கும் ஒருவன்... விக்கிலீக்ஸ், பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல.. என்ற கணக்கில் உலக நாடுகளின் தலைவர்களை கட்டுப்படுத்தும் ஒருவன்.. 
அசெஞ்சேயின் செயல் மிகவும் பாராட்டிற்குரியதாகவும்.. அவருடைய துணிச்சலுக்கு சலாம்.. அதற்கு பின்நிற்கவும் நாங்கள் செய்யலாம்.. ஆனால் சேயிற்கு நிகராக இயலாது..
எனது வேண்டுகோள் இதுதான்.. சேயிற்கு நிகராக அவரை மட்டுமல்ல யாரையும் சொல்ல முடியாது.. 

"மாபெரும் ஆன்மா ஒன்று மனிதகுலத்தை ஒன்றுக்கொன்று பகைமையான இரண்டு பகுதிகளாக பிரிக்குமேயானால், நான் மக்களோடுதான் இருப்பேன். அது இந்த இரவில் ஒரு விதியாக எழுதப்பட்டுவிட்டது..."
-சே...


-மோனி..