Monday, July 11, 2011

வேசிக்கும் வேண்டாதவன்...




மக்கள் வணங்கும்
'சாமியார்' அவன்..
மாக்கள் அவர்களிற்கு
சாமி யாரென காட்டிட..

பரம்பொருள் அவனது
மகிமை பாடிட
பேரின்பப் பேருரை
புனைந்திட விரைந்தான்



எண்குணங் கொண்டு

மூவுலகம் கொள்ளும்
பரிணாமம் கடந்தவன்
உண்மை பாடிட

மும்மலங்களால் கட்டுண்டு
மானிட பாவம்
தனை நீக்கும் வழியொன்று
காட்டிவிட


பக்கங்கள் நிறைத்துச்சென்றான்
பலவரிகள் கிறுக்கிச் சென்றான்
பாவங்கள் கழுவிச் செல்லும்
பக்தி மார்க்கமொன்றை

உரை எழுதி முடிந்தவுடன்
மானிடப் பதர்தனை
உய்திட சொல்லிடுவேனெ்றான்
இதனை...

இவையனைத்தும் சொல்லிவிடும்
அவன்....
வேசிக்கும் வேண்டாதவன்....

-மோனி..

Friday, July 1, 2011

வவுனியாவில் நடை பெறவுள்ள Carnivelஐ புறக்கணிப்போம்....




இந்தப் பதிவு ஒரு வவுனியாவை(இலங்கை) சேர்ந்த நண்பர்களுக்கொரு கோரிக்கை...

வவுனியாவில் வழமைபோல இந்த மாதமும் வருகிற கிழமை Carnivel களியாட்டங்கள் நடைபெறவுள்ளன. அதற்கான அடுக்குப்படிகளும் தற்போது ஆரம்பித்துவிட்டது.... என்னுடைய கோரிக்கை இதை வவுனியா வாழ் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்...

 யுத்தம் முடிந்துவிட்டதென்று கூறி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது ஆனாலும் எங்கள் தாயக பூமியில் எங்கள் உறவுகள் இன்னும் நிராதரவாக்கப்பட்டே இருக்கிறார்கள். யாழ்குடாநாட்டில் இளவயது கருக்கலைப்பு அதிகரிப்பு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவிச் பெண்களிற்கு வேலை வாங்கித்தருவதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபடவைத்தல், எங்கள் உறவுகளை கொன்ற குவித்த நேரடிக் காட்சிகள் வெளியிடுவதல் என்று எங்கள் மக்கள் சீரழிவின் பாதையை நோக்கி பயனித்துக் கொண்டிருக்கிறார்கள்...



இவர்களின் தேவைகளைத்தான் எங்களால் பூர்த்தி செய்யமுடியவில்லை, இவர்கள் கண்ணீர் விடும் போது நாங்கள் அதற்கு அமைதியாய் செவிமடுத்து ஆறுதல் கூறாவிட்டாலும் பரவாயில்லை.. இவர்கள் கண்ணீருக்கு மதிப்பளித்து அவர்களுக்கு எங்கள் அமைதிகளை பரிசளிப்போம்..

இந்தியாவிலே எங்கள் சகோதரர்கள் எங்களிற்காய் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்திருக்கிறார்கள் என்பதை மறக்கவேண்டாம்...

நான் அங்கே போனால் என்ன...?? குடியா முழுகவிடப்போகிறது என்று நினைக்கும் சகோதரர்களே... இதே போன்ற நிலையை ஓர் நாள் எங்களுக்கும் வரலாம்.. அப்போது எங்களுக்காய் கண்ணீர்விட உறவுகள் வேண்டும்...

இல்லை நாங்கள் போவோம் என்று நீங்கள் எண்ணினால்.. நிச்சயமாக தமிழ் அன்னை உங்களை வாழ்த்தி அனுப்புவாள்..

இந்த கருத்தை சொல்வதற்கு எனக்கு தகுதியில்லை அல்லது இந்தப் பதிவு  தனிமனித சுதந்திரத்தை மீறியது என்று நீங்கள் கருதினால்... தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்...

Sunday, June 26, 2011

ஒரு பருந்தும்... பல காகங்களும்...




கதிரவன் எல்லையில் மேலெழ
காக்கைக் கூட்டமொன்று நகர்கிறது
தனியே தன் கூட்டிலிருந்த பருந்தொன்றை
திட்டமிட்டு தாக்குகிறது..

பருந்து இதை எதிர்பார்திருந்தது - ஆனால்
இந்த தனிமையை இல்லை
புரியாத மொழி பேசும் காக்கைகளுடன்
தன் மொழி பேசும் காக்கைகளும் கண்டு
திகைத்து நின்றது - புன்முறுவலுடன்
கருங்காக்கைகளுடன் - ஓரத்தில்
பல வௌ்ளைக் காகங்களும் நின்றது
கண்டு புரிந்த நின்றது - பருந்து

எண்ணிக்கையில், பலத்தில் மேலெழுந்த
காக்கைக்கூட்டத்தின் முன்
பருநதின் நிலை தோல்வியை நோக்கியது..
கொண்டு குணமும் - கொதிக்கும் இரத்தமும்
கொண்ட பருந்து - அன்று
நில்லாமல் போராடியது - தம்
எண்ணிக்கைக்கு எட்டமுடியாத
காக்கைகளை விரட்ட முற்பட்டது..

தன்னைக் காக்க தன் சகோதரர்
வருவர் என்று தனித்திருந்தது
பாவம் அன்று தெரியவில்லை - தன்
சகோதரர் என்றிருந்தது - பருந்துகளல்ல
நரிகள் என்று..

பருந்தின் இறக்கை தாக்கப்படுகிறது
மூர்க்கத்னத் தாக்குதலில்
கண்பறிக்கப்படுகிறது
போராடியது - விடாமல்
போராடியது...
வீரம் உதிரச் சொத்து அதற்கு

இறுதியில் பருந்து வீழ்த்தப்படுகிறது
தோற்றம் சிதைக்கப்படுகிறது.....
வீரவெற்றி பெற்றதாக கரைந்துகொண்டே
காகங்கள் பறந்து செல்கின்றன

முடிவில்..
பருந்தின் சிதையாத
கூட்டிலிருந்து சில பருந்துக் குஞ்சுகள்
கண் திறக்கின்றன....

-மோனி..




Monday, June 20, 2011

எழுதிக்கொள் இதனை... நான் ஓர் தமிழன்...




('வாக்குமூலம்..' என்ற பாலஸ்தீனக் கவிதையை தழுவி நான் எழுதிய கவிதை இது...)

எழுதிக்கொள் இதனை
நான் ஓர் தமிழன்
எனது அடையாள அட்டையில் - மட்டுமே
'நான்' என்ற அடையாளம் கொண்டவன்
கோபமா உனக்கு..??

எழுதிக்கொள் இதனை
நான் ஓர் தமிழன்
எழுதும் எனது பெயரும்
போகவிருக்கும் சவப்பெட்டியும்
தவிர
ஒன்றும் இல்லை எனக்கு
ஆனாலும் - உன்
கருணை கேட்டு இரந்திட மாட்டேன்
உனக்கு முழந்தாளிட்டு பணிந்திடேன்
மாறாக - என்
பாதங்களில் இறந்துபோவேன்..


எழுதிக்கொள் இதனை
நான் ஓர் தமிழன்
கல் தோன்றி மண்தோன்றமுன்
தோன்றி
வெயிலும் சோலையும்
பாராட்டிய வீரமண்ணை
சேர்ந்தவன் நான் - என்
மரணங்கள் உன்
வெற்றியை கொன்றே செல்லும்


எழுதிக்கொள் இதனை
நான் ஓர் தமிழன்
என் கண்களைப்போலவே
என் தலைமயிரும் கறுப்பு
எனது விலாசம்,
மறுக்கப்பட்ட ஒரு தூாரத்து கிராமத்தில்
நீ கொண்டுவந்த குடியேற்றங்களால்
ஒதுக்கப்பட்ட குப்பைமேடு அது
அதன் தெருக்களுக்கு பெயரில்லை
வாழ்வுகளுக்கு நாதியில்லை
அங்கே வந்தென்னை கேள்
நான் என்று நாம் வருவோம்


எழுதிக்கொள் இதனை
நான் ஓர் தமிழன்
எனது நிலத்தை திருடினாய்
நீ
எனது சகோதரிகளை சூறையாடினாய்
நீ
எனது குழந்தைகளை கொன்றாய்
நீ
நீ  விட்டுவைத்தது இந்த
வனாந்திரம் மட்டுமே...

இவை அனைத்துக்கும் மேல்
இதனையும் எழுது - நான்
யாரையும் வெறுப்பவன் அல்ல
யாரையும் கொள்ளை அடித்தவன் அல்ல

ஆனாலும்- நீ
கவனம்
முடிவுகள் என்றுமே நிலையற்றது...

-மோனி..


Sunday, June 19, 2011

தமிழா...!! உனக்கிந்த குரல் கேட்கவில்லையா...??




யாரோ கூப்பிடும் குரல் கேட்டு
விழித்துக் கொண்டேன்

அரை நித்திரையிலிருந்து
யாரோ என்னை கூப்பிடவதுபோலிருந்தால்
விழித்துக்கொண்டேன்

அபயத்தின், வலியின்,
மரணத்தின், கோபத்தின்
அழைப்பின் குரலது..

குரலின் சொந்தம் தேடி
ஊரும் இடமும் தேடினான்
யாரும் புலப்படவில்லை

மீண்டும் புரண்டு புரண்டு படுத்தேன்
அதே குரல் மீண்டும் கேட்டு
மீண்டும் விளித்துனக்கொண்டனே்..

புரிகிறது, அந்த குரல்
வெளியிருந்தல்ல - என் உள்ளிருந்து
கேட்கிறது..

தமிழா...!! உனக்கிந்த குரல் கேட்கவில்லையா...??

-மோனி..


Monday, May 16, 2011

மூத்த தமிழனுக்கு...




தமிழில் முக்குளித்து
மந்திரமொழி உரைத்து

தமிழ்பெற்ற மூத்த மகன்
என்றிருந்தோம் உன்னை.

பதவிதனைத் துறந்து - தம்பி
உயர் குடித்த - பாசிச
வெறி பிடித்த - கயவர்
இருக்கை வேரறுத்து - வருவான்
என்றிருந்தாள் தமிழ் அன்னை..

கற்பைப் பறிகொடுத்து
கதறினாள் தமிழ்ப்பெண் இங்கே
பதவி வெறி பிடித்து
மதியது தறி கெட்டு
உணராமல் இருந்தாய் நீ அங்கே..

கால் மேல் கால் போட்டு
எக்காளம் தான் கொண்டு
இருக்காதே என்றுரைத்தோம்
அன்று - இன்றுன்
நரித்தோல் உரித்து
வஞ்சகந்தான் வெறுத்து
துாக்கி எறிந்துவிட்டனர்
உன்னவர் அங்கே...

இன்றுவந்த 'அவள்' ஒன்றும்
தேவதை இல்லைதான் எமக்கு - இனி
எம் மூக்கு போனாலும் சரி - உன்
சகுனம் பிழைத்தால் போதும்..

தமிழனைப்புதை்துவிட்டாய் - அவன்
கனவுகள் தூங்கவில்லை - புதைகுழிகளும்
கதை சொல்லும் - நாம் மீண்டோம்
என்று வரலாறுதான் சொல்லும்

ஆலமரத்திற்கு வித்திட்டிருக்கிறோம - அது
விருட்சமாய் வளர காவல் நிற்போம்
பின்னை அதை அழிக்க - இனி
யாராலும் முடியாது...

-மோனி..




Friday, May 6, 2011

சே, அசெஞ்சே.... தயவுசெய்து நிகராக ஒப்பிடாதீர்கள்.




இந்தப் பதிவு பலரது எதிர்க் கருத்துக்களைத தூண்டலாம்.. இது என் தாழ்மையான வேண்டுகோள் மாத்திரமே..

 
அண்மையில் பேஸ்புக்கில் சேயின் முகத்திற்கு ஜீலியன் அசெஞ்சேயின் முகத்தை மோர்ப் செய்து ஒரு புகைப்படத்தைக் கண்டேன்.. (கீழே காட்டப்பட்டுள்ளது..).. இதை உங்களில் பலரே கண்டிருப்பீர்கள்... 

இதை பலர் பகிர்ந்திருந்தது மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்தியது.. தயவுசெய்து சேயிற்கு நிகராக ஒப்பிடாதீர்கள்.. அது யாராக இருந்தாலும் சரி...

சே குவேரா, இந்த உலகத்தில் இன்னும் எத்தனையோ அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் நெஞ்சில் எரிந்து கொண்டிருக்கும் புரட்சித் தீ, தன் உயிரையே கொடுத்து அடிமைத்தனத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக குரல் கொடுத்தவன், மக்களிற்காள அப்பழுக்கற்ற தலைவன். பிறந்து ஊர் ஆர்ஜென்டீனா ஆனால் கியூபா, கொங்கோ, பொலிவியா என்று சர்வாதிகாரம் மக்களை நசுக்கிக் கொண்டிருந்த இடங்களிற்கு சென்று மக்களிற்காக மக்களோடு நின்று போராடினார். 

இளமையில் துடிப்பும், மனிதத்திற்கான விளிப்பும் கொண்டு மக்களின் விடியலிற்காய் பாடுபட்ட ஒரு தலைவன்.  அவர் நினைத்திருந்தால் ஆர்ஜென்டீனாவில் தன்னுடைய காதலுடன் மருத்துவராக இருந்திருக்கலாம்.  கடைசி கியூபாவில் கொடுக்கப்பட்ட அமைச்சர் பதவியில் சொகுசாக வாழ்ந்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் மக்களிற்காக போராடி மண்ணிற்கு விதைக்கப்பட்டான்... சுதந்திரம் என்ற விருட்சம் வளர...

அசெஞ்சே, மேற்கத்தையே ஏகாதிபத்தியத்தின் அதிலும் முக்கியமான உலகத்திற்கே கட்டப் பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் உண்மை வடிவத்தை தோலுரிக்கும் ஒருவன்... விக்கிலீக்ஸ், பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல.. என்ற கணக்கில் உலக நாடுகளின் தலைவர்களை கட்டுப்படுத்தும் ஒருவன்.. 
அசெஞ்சேயின் செயல் மிகவும் பாராட்டிற்குரியதாகவும்.. அவருடைய துணிச்சலுக்கு சலாம்.. அதற்கு பின்நிற்கவும் நாங்கள் செய்யலாம்.. ஆனால் சேயிற்கு நிகராக இயலாது..
எனது வேண்டுகோள் இதுதான்.. சேயிற்கு நிகராக அவரை மட்டுமல்ல யாரையும் சொல்ல முடியாது.. 

"மாபெரும் ஆன்மா ஒன்று மனிதகுலத்தை ஒன்றுக்கொன்று பகைமையான இரண்டு பகுதிகளாக பிரிக்குமேயானால், நான் மக்களோடுதான் இருப்பேன். அது இந்த இரவில் ஒரு விதியாக எழுதப்பட்டுவிட்டது..."
-சே...


-மோனி..

மன்மத தகனம்...(கவிதை)




(ஆத்திகர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.. இங்கு கடவுளரை நான் கிண்டல் செய்யவில்லை.. இவை வெறும் குறியீடுகளே..)

தேவலோகத்தில் ஒரே சத்தம்..
வார்த்தைகளின் வாதம்..
காதில் விழுந்த ஓசைகள்
உதட்டில் தெறித்தன..

வழக்கம் போலதான்..
கதை ஒன்று
கதாபாத்திரம் வேறு
யார் பெரியவன் என்ற சண்டை
மன்மதனுக்கும் சிவனுக்கும்

சிவன்..
'உன்னை என் பார்வையில் எரித்தேன்..'
மன்மதன்
'இருந்தும் உம்மை வென்றேன்..'

சாட்சிகள் அழைக்கப்பட்டனர்...

பிரம்மாவும் விஷ்ணுவும் கூண்டேற்றபட்டார்கள்
சாட்சியாக சத்தியம் கூற
'நான் அடியைக் கண்டேன்..'
என்று பிரம்மா
'நானும் முடியைக் கண்டேன்..'
என்று விஷ்ணு

பொய்மையோடு
மன்மதனின் பக்கம் ஓங்கி வந்தது
வாய்மையோடு
சிவனின் பக்கம் தாழ்ந்து சென்றது

இந்திரன் 'சிவன் பிச்சை எடுத்தான்..'
சனி 'நான் அவனை பிடித்தேன்..'
என்றான்..
'இவன் பித்தன்..','பேய்களுடன் ஆடுபவன்..'
குரல்கள் ஒலித்தது...
கோபம் பொறுமையின்
எல்லை கடந்தது...

உண்மையின் வேகம்
சிவனின் கோபமாய்...
நெற்றிக் கண் கனல எரிந்தான்
மன்மதன்..
இந்த முறை மீள முடியாமல்

நிசப்பதம்...
தேவ கூட்டம் கலைந்தது


இனி...
பாவம் உமாதேவியார்...

-மோனி...


Thursday, May 5, 2011

The Prestige - ஹாலிவூட் சினிமா




 நிறைய நாட்களாக சினிமா பற்றி ஒரு பதிவும் எழுதவில்லை என்ற வருத்தத்தைத் தீர்க்க இந்தப் பதிவுடன்  உங்களை சந்திக்கிறேன்.

Christoper Nolan.. எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர். அவருடைய படங்கள் எப்போதும் நெஞ்சில் ஒரு சுமையை எப்போதும் சுமக்க வைக்கும். பொழுதுபோக்கிற்கான அம்சமும், விறுவிறுப்பும் அதே சமயம் இழையோடிய ஒரு சோகத்தையும் சுமந்தே அவருடைய படங்கள் காணப்படும். அவருடைய படங்களில் என்னை மிகவும் கவர்ந்த படம் Memento அதற்கு அடுத்தது என்றால் இந்தப் படம்தான்.

Christopher Priest  என்ற நாவலாசிரியால் எழுதப்பட்ட The Prestige என்ற நாவலை தழுவியே டைரக்கடரும் அவரது சகோதரர் Johnathan Nolan இணைந்து திரைக்கதை எழுதி படம் வெளிவந்தது. இது இரண்டு ஒஸ்கார் விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.






லண்டன் நகரில் பத்தொன்பதாம் நூாற்றாண்டின் இறுதியில் Robert Angier, அவருடைய உயிரிற்கு உயிரான மனைவி Julia McCullough, Alfred Borden நண்பர்களாக ஒரு மாயாஜால வித்தைக்காரின் கீழ் உதவியாளர்களாக பணிபுரிகிறார்கள். ஆனால் ஒரு காட்சியின் போது Julia இறந்து போகிறார். இதற்கு Alfred தான் காரணம் என்று Robert குற்றம் சாற்றுகிறார். இது இவர்கள் இருவரையும் எதிரிகளாக மாற்றுகிறது. இருவரும் நாட்டின் சிறந்த வித்தகர்களாக மாறுகிறார்கள். ஆனால் ஒரு காட்சியில் Alfred சிறந்த வித்தை ன்றை நிகழ்த்த.. அந்த வித்தைக்கான ரகசியத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற வெறி Robertஐ ஆட்கொள்கிறது.. இது ஏற்படுத்தும் விளைவுகள்தான் படத்தின் மொத்தக் கதை..
'பொறாமை' என்பதுதான கதையின் 'ஒன்லைன்'.. இதில் நொலான் ஒரு மாயாஜாலவித்தகரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அதில் உள்ள குழப்பங்களையும் சிறப்பாக காட்டி இருக்கிறார்.




எதிர்பார்க்காத திருப்பங்கள், மயிர்க்கூச்செறியும் கிளைமாக்ஸ் என்று கதை முடிகிறது.. கட்டாயம் எல்லாரும் பார்க்க வேண்டிய படம். எத்தனை முறை வேண்டும் என்றாலும் பார்ககலாம்

நடிப்பு சொல்லவே தேவையில்லை Robertஆக Hugh Jackmanம்  Alfred Bordenஆக Christian Bale ம் அசத்தியிருப்பார்கள். ஒவ்வொரு பரேமும் ரசிக்கும்படியாக இருந்தது.

இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு படம் ஆனால் ஒரு ஆரட்டிஸ்டிக் படங்களுக்கான தகுதிகள் யாவற்றையும் கொண்டிருக்கும். இப்படிப் படங்கள் அருமை..  பெரிய வெற்றியையும் பாரிய வசூலையும் அள்ளித் தந்த படம்...



கட்டாயம் பாருங்கள்..

-மோனி





















ஒசாமாவின் மரணம் - உலக அரசியல், பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள்...





செப்டம்பர் 11 உடன் ஒசாமா என்ற ஒரு தனிமனிதன் இந்த உலகத்தின் போக்கையே தலைகீழாக திருப்பிப்போட்டான். அதுவரை தங்களை உலகத்தின் வல்லரசு என்று மார்தட்டி வந்த அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அடித்தான். அமெரிக்காவின் பாதுகாப்பு. பொருளாதாரம், புலனாய்வு  என்று மூன்று தூண்களை அடித்து நிலைகுலையச் செய்தான்.


பதிலடி கொடுக்க வேண்டும் என்று 'பயங்கரவாதம் மீதான போர்' என்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சொற்பதத்துடன் ஜோர்ஜ் புஷ் முஸ்லீம் தேசங்கள் மீது தங்கள் ஏகாதிபத்திய வெறியை வெளிக்காட்டினார்கள். சந்தர்பத்திற்கு காத்திருந்து பாய்ந்தது போலவே அந்த யுத்தங்கள் காணப்பட்டது என்பது வெளிப்படை உண்மை. மீண்டும் ஒரு உலகப்போர் தொடங்கும் என்று எதிர்பாரக்கப்பட்ட போது பல முதுகு குத்தல்கள் மூலம் அது இல்லாமல் போனது. முதலில் ஆப்கானிஸ்தான், பிறகு ஈராக் என்று தங்கள் தாக்குதல்களை தொடுத்தார்கள். பின் ஈரான் மீது ஒரு யுத்தம் தொடுப்பது போல பாவனையை ஏற்படுத்தினார்கள்.


இராணுவ படையெடுப்புக்கள் அவர்கள் எதிர்பார்த்து போல இருக்கவில்லை. எதிரிகள் பின்வாங்கி வளங்களை பாதுகாத்துக் கொண்டு மக்களின் பலத்தை வைத்து சிறு சிறு தாக்குதல்களை நடத்தினார்கள். ஒரு சில முஸ்லீம் நாடுகள் அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் பக்கம் நின்றாலும் பல நாடுகள் அமெரிக்க எதிர்ப்பு சக்திகளுக்கு நேரடியாவோ மறைமுகமாகவோ உதவி வந்தார்கள். 


இதனிடையில் அமெரிக்கா பொருளாதாரம் வரலாறு காணாத பெரும் வீழ்ச்சியைக் கண்டது. எத்தனையோ அமெரிக்கா கம்பெனிகள் பாங்கரப்ட் ஆகின, மக்கள் வேலை இல்லாமல் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டார்கள். இந்த பொருளாதார வீழ்ச்சி உலகத்தில் உள்ள எல்லா நாடுகளையும் ஒரு ஆட்டு ஆட்டியது. ஆனால் ஆச்சரியப்படும் வகையில் இந்தியா இதில் பாரிய சேதங்களை சந்திக்காமல் தவிர்த்துக் கொண்டது. இதுவே பின்பு தெற்காசிய பிராந்தியத்தில் மாற்றத்தை கொண்டு வந்தது.

இராணுவ தோல்வி, மக்கள் நேரடி எதிர்ப்பு, பொருளாதார வீழ்ச்சி, வேலைவாயப்பில்லாமை என்று அமெரிக்க வல்லரசு ஆட்டம் கண்டது. அதுவரை உலகத்திற்கே கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருந்த நிலை போனது. அதன் விளைவு "பிராந்திய வல்லரசு" என்ற நிலை ஏற்பட்டது. 

என்ன இந்த பிராந்திய வல்லரசு..?? அதாவது உலகத்தின் ஒவ்வொரு பிராந்தியங்களிலும் ஒவ்வொரு பலம் வாய்ந்த நாட்டின் ஆதிக்கம் ஓங்கி வந்தது. தெற்காசியாவில் பாகிஸ்தானின் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற அல்லாடியதால் இந்திய பலம் ஓங்கியது. இதுதான் விடுதலைப்புலிகளின் தோல்விக்கும் இலங்கையில் வித்திட்டது என்பது வெளிப்படை. சீனா, ரஷ்யா என்று நாடுகள் தங்கள் பலங்களை மெல்ல மெல் வெளிப்படுத்தியது. இதில் முக்கியமான நிகழ்வு 2008ஆம் ஆண்டு ஜோர்ஜியா மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்.

உலக அரசியல் அரங்கில் அதிர வைத்த இராணுவ நடவடிக்கை இந்த படையெடுப்பு. ஜோர்ஜியா அமெரிக்காவின் கைப்பொம்மை என்பதும் ரஷ்யாவை கண்காணிப்பதற்கு அமெரிக்காவின் அவுட்போஸ்ட் என்பதும் வெளிப்படை. ஜோர்ஜியாவின் அரண்களை 2 மணி நேரங்களில் தகர்த்து உள் நுழைந்த ரஷ்ய இராணுவம் இந்த உலகத்திற்கு ஒரு செய்தியை அனுப்பியது.

அமெரிக்காவின் கைப்பிடி மெல்ல தளரந்து வரும் போதுதான் பராக் ஒபாமா அமெரிக்க அதிபரானார். அமெரிக்காவின் சரித்திரத்தை மாற்றிப்போட்ட நிகழ்வு - கறுப்பினர் ஒருத்தர் அதிபரானது.  அவரை ஒரு கறுப்பு தேவதையாக சித்தரித்தார்கள். எதிரி நாடான கியூபாவுடன் கைகோர்த்தல். அதுவரை எதிரியாக இருந்து வெனிசுவேலா ஹகோ சார்வேஸ் உடன் கைகுலக்கல், படைகளை திரும்ப பெறல், திரும்ப பாரக்க வைக்கும் பொருளாதார சீர்திருத்தங்கள் என்று அமெரிக்கா மேடையை அதிர வைத்தார்.


இவருடைய பொருளாதார சீர்த்திருத்தங்கள் இவரின் மீது இருந்த செல்வாக்கை குறைத்து சென்றது. ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் அமெரிக்காதான் தனக்கு முக்கியம் என்ற போர்வையில் அவர் செய்த ஆட்சி அமெரிக்க வரலாற்றில் ஒரு புது நாடகம்.

ஆனால் அமெரிக்காவின் கை மீண்டும் மெல்ல மெல்ல அரசியல் அரங்கில் ஓங்கி வரத்தொடங்கியது. அதுவரை அதளபாதாளத்தில் சென்றுகொண்டிருந்த பொருளாதாரத்தின் வீழ்ச்சி இழுத்து நிறுத்தப்பட்டது. எகிப்திய புரட்சி, சூடான் வீழ்ச்சி, கடாபியின் பின்வாங்கல் என்று உலக அரசியலே அல்லாடிக் கொண்டிருக்கும் போது...

சில சில இடத்தில் அமெரிக்கா மறைமுக காய்நகர்ததல்களின் மூலம் வெற்றிகளை கண்டுவந்த அமெரிக்காவிற்கு லட்டு மாதிரி வந்தது ஒசாமாவின் வீழ்ச்சி....


"Justice is done." என்ற ஒபாமாவின் அறிக்கையுடன் இனி உலக அரசியலில் ஒரு மாபெரும் மாற்றத்தை எதிர்பார்கலாம். அமெரிக்காவிடமிருந்து யாரும் ஔிய முடியாது என்று ஒபாமா எல்லா நாடுகளிற்கும் ஒரு செய்தியை கூறியிருக்கிறார். பின் லேடனின் வீழச்சியுடன் அல்கைதாவின் எதிர்காலமும் கேள்விக்குறி ஆகவிடும்...

பயங்கரவாதத்தின் மீது கடந்த தசாப்த காலமாக நடத்தி வந்த யுத்தம் ஒரு வழியாக ஓய்விற்கு வந்தவிட இனி அமெரிக்காவின் முழு கவனமும் சீனா மீது இருக்கும் என அரசியல் வல்லுனர்கள் எதிர்பார்கிறாரகள். ஒசாமாவின் மரணத்தை சீனா வரவேற்று அறிக்கை விட்டிருந்தாலும் அடிப்படையில் அவர்களுக்கு கெட்ட செய்தி. 

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை அமெரிக்காவின் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது உலக பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்களை எதிர்ப்பார்கலாம். அது சாதகமாவே அமையும்.

இதை விட தற்போது இந்தியா அரசியல் நெருக்கடி, ஜப்பான் இயற்கை அனர்த்தம், ரஷ்யாவில் புட்டினிற்கும் ரஷ்ய அதிபரிற்கும் இடையில் உள்ள அரசியல் குழப்பம் என்று மற்றை நாடுகளின் தள்ளாட்த்தை அமெரிக்கா தனக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்ளப் பார்க்கும்...


இதன் விளைவு .... "History Repeats Itself"

-மோனி...

(இந்தக் கட்டுரை எழுதுவதற்குரிய அறிவு எனக்கில்லை. நான் இதுவரை வாசித்த தகவல்களின் திரட்டி கொஞ்சம் பகுத்தறிவு கலந்தது..)



Wednesday, May 4, 2011

100 வருடங்களாக தீரக்கப்படாத கணித புதிரைத்தீர்ததார் ஒரு கணித மேதை...




ஒசாமா, ஒபாமா என்பதற்கு அப்பால் இப்படிப்பட்ட விடயங்களும் இந்த உலகத்தில் உள்ளது என்பதை நிரூபித்துள்ளார் ரஷ்ய கணித மேதை Grigory Perelma...


1904 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட Poincare conjecture theorem இதுவரை கணித உலகில் தீர்க்கப்படாத ஒரு புதிராக காணப்பட்டது. அதாவது துளையில்லாத எந்தவொரு முப்பரிமாண உருவத்தையும் ஒரு கோளமாக ஆக்க முடியும் என்று முன்வைக்கபட்ட வாதத்தை கணித ரீதியாக நிரூபிப்பது.


சொல்றதுக்குத்தான் இது இலகுவாக இருக்கிறது. ஆனால் அதை தீர்க்க முயன்று எத்தனையோ பேர் தோற்று போயிருக்கிறார்கள்.


ஆனால் 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டு  Grigory Perelma இதற்கான இரண்டு நிறுவல்களை வெளியிட்டார். அதை சரியான நிறுவல் என அடையாளம் காண கணிதவியலாளர்களுக்கு 7 வருடங்கள் சென்றது..!!! அதை கடந்த வருடம் சரியான நிறுவல் என அறிவித்து Grigoryக்கு 1 மில்லியன் டோலர் பரிசும் கணிதவியலாளர்களின் நோபல் எனப்படும் பீல்டஸ் மெடலையும் கொடுத்தார்கள்.

ஆனால் அவர் அந்த பணப்பரிசை ஏற்க மறுத்துவிட்டார்...!!! அதற்கு அவர் கூறிய காரணம்..
"வெறுமை இந்த உலகத்தின் எல்லா மூலையிலும் உள்ளது... அதை நாங்கள் கணிக்கவும் இயலும். இது எங்களுக்கு பல வாய்ப்புக்களை அளிக்கிறது. இந்த அண்டத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று எனக்கு தெரியும்போது ஏன் 1 மில்லியனுக்கு பின்னால் ஓடவேண்டும்...?"..

இவன் கிறுக்கன் என்று உங்களில் சிலர் கூறுவது போல உள்ளது.. ஆனால் என்னைப் பொறுத்தவரை இவருக்கு சிலை வைக்க வேண்டும்...

இதில் இன்னும் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால்.. இவரிடம் நீங்கள் இதை எப்படித் தீர்த்தீர்கள் என்று கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில்...

"பைபிளில் யேசு நீரில் நடந்தார் என்று கூறப்பட்டது. அவர் அவ்வாறு நீரில் மூழ்காமல் நடப்பதற்கு என்ன வேகத்தில் நடந்திருப்பார் என்று யோசித்தேன் விடை வந்தது..."

ஆனால் தற்போது ஊடகவியலாளர்களிடம் இருக்கும் மில்லியன் டொலர் கேள்வி..
"இவரிற்கு நிகங்களையோ தலைமயிரையோ வெட்டும் பழக்கம் உண்டா..??" 

இப்படியும் சில மனிதர்கள்....

(நன்றி :- டைம் இணையதளம்)

நரகத்தில் இருந்து டிவிட்டரில் ஒசாமா...!!!




சதாம் ஹசைன். அடோல்ப் ஹிட்லர் என்ற வரிசையில் தற்போது ஒசாமாவும் நரகத்ததில் இருந்து டிவிட்டரில் டிவிட் செய்து கொண்டிருக்கிறார்.



என்ன வழக்கம் போலதான் அமெரிக்க குசும்பு...


டிவிட்டரில் ஏற்கனவே ஒசாமாவின் பெயரில் பொய்யான கணக்கு திறந்து இருந்திருந்தது. அதை விட பல புதிய கணக்குகளும் போன ஞாயிறு திறக்கப்பட்டிருந்தது..

அதில் சில முக்கி டிவிட்ஸ்..

@OsamaBinIaden Osama Bin Laden
Obama thinks its a big deal that he found me....I've been on twitter this whole time #comeatmebro
@BinLadenInHell Osama Bin Laden
That Celine Dion music kept me up all friggin' night. Hell really sucks!
@BinLadenInHell Osama Bin Laden
That Celine Dion music kept me up all friggin' night. Hell really sucks!
@Real_Bin_Laden Osama bin Laden
OK, time for bed. All of the sudden, I am dead tired...oh...you see what I said there? I totally didn't even realize...That is funny...

@OsamaInHell Osama bin Laden
Oh good - turns out James Franco is teaching a class here next month.

@GhostOsama Osama Bin Laden
Well this sucks...I accidentally enabled location on my tweets.

மார்ட்டின் லூாதர் கிங்கின் வசனங்கள்
அடுததபடியாக டிவிட்டர் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அப்டேட்
"I mourn the loss of thousands of precious lives, but I will not rejoice in the death of one, not even an enemy. Returning hate for hate multiplies hate, adding deeper darkness to a night already devoid of stars. Darkness cannot drive out darkness: only light can do that. Hate cannot drive out hate: only love can do that." --Martin Luther King Jr.
( "நான் இறந்துபோன ஆயிரம் உயிர்களுக்காக கண்ணீர் விடுகிறேன் ஆனால் அவன் என் எதிரியாக இருந்தாலும் சரி, ஒருவனின் மரணத்திற்கை கண்டு களிக்க மாட்டேன்... . பலரது வெறுப்பிற்கு பதிலாக வெறுப்பைக் காட்டுவது என்பது நடசத்திரங்கள் அற்று இருண்டுபோன இரவிற்கு மேலும் இருட்டைக் கொடுப்பது போன்றது. இருள் இருளை விரட்டாது, ஔி மட்டுமே இருளை அடக்கும். வெறுப்பு வெறுப்பை விரட்டாது அன்பு ஒன்று மட்டும்தான் அதைச் செய்யும்...")


 இது அமெரிக்காவில் கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடிய தலைவரான மார்ட்டின் லூாதர் கிங் சொன்னதா சமூக வலைதளங்களில் உலவுகிறது. ஆனால் இது முற்று முழுதாக அவரால் கூறப்படவில்லையாம். கடைசியாக கூறப்பட்ட பகுதி மட்டும் தான் அவரால் கூறப்பட்டதாம். என்ன கொடுமை பாருங்க...??அதில கூட நொட்டை பிடிக்கிறாங்க..

தாக்குதல் நடத்தும் போது ஒசாமாவிடம் ஆயுதமில்லை

 அமெரிக்கா இராணுவம் ஒசாமாவின் இருப்பிடத்தைத் தாக்கும் போது ஒசாமாவிடம் ஆயுதம் இருக்கவில்லையாம். இருந்தும் அவரை சுட்டுக் கொன்றது என்பது ஜெனிவா பிரகடனத்திற்கு எதிரானது...

அத்தோடு ஒசாமாவின் உடலின் உண்மையான படங்களை விரைவில் வெளிவிடுவோம் என்று CIA தலைவர் கூறியுள்ளார். இது ஏற்படுத்தப் போகும் தாக்கம் என்னவோ..

ஒசாமாவின் இருப்பிடத்திற்கு குவியும் விமரசனங்கள்




Google Maps ல் ஒசாமாவின் இருப்பிடத்திற்கு விமர்சனங்கள் குவிந்த வண்ணம் உள்ளனவாம். அதில் அதிக வரவேற்பைப் பெற்ற விமர்சனம்

"I heard that this place is now available (prior residents left suddenly and unexpectedly)."





 (நன்றி :- www.huffingtonpost.com)


Tuesday, May 3, 2011

அமெரிக்காவால் இதுவரைத் தேடப்பட்ட மோஸ்ட் வான்ட்ட(Most Wanted) குற்றவாளிகளின் முக்கிய பட்டியல்...




மே 1,2011 ஆம் திகதி அமெரிக்காவால் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியான ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அமெரிக்காவால் தேடப்பட்டு வந்து மிக முக்கிய குற்றவாளிகளின் பட்டியலைப் பாரக்கலாம். (இந்த தொகுப்பில் ஒசாமாவைத் தவிர்த்திருக்கிறேன்...)


Ted Bunty


 உலகத்தில் பெண்களை மிகவும் கொடிய முறையில் கற்பழித்துக் கொன்ற சைகோ கொலைகாரன். 1978 ஆம் ஆண்டில் இருந்து பல பெண்களை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி கொன்றிருக்கிறான். சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இரண்டு தடவை தப்பி ஓடி பின்னர் பிடிக்கப்ட்டிருக்கிறான். தான் 28 பெண்களை வல்லுறவலிற்கு உட்படுத்தி கொன்றதாக ஏற்றுக் கொண்டிருந்தாலும் அந்த எண்ணிக்கை 100ஐத் தொடும் என்றே கூறப்படுகிறது. இவன் பெண்களைக் கொன்றுவிட்டு பிணங்களுடனும் செக்ஸ் வைத்திருக்கிறான். இவன் 1989 ஆம் தனது 43ஆவது வயதில் ஆண்டு மின்சாரக் கதிரை  தண்டனை்க்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டான்....

James Earl Ray


கடைகளில் திருடுதல், மெயில் பிராட் என்று சிறுதாக தொடங்கிய தன் குற்றத்தை ஏப்ரல் 4, 1968 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள கறுப்பின மக்களின் சம உரிமைக்காக போராடிய மார்ட்டின் லூாதர்கிங்கைக் கொன்றதன் மூலம் அமெரிக்காவால் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியானான். பின்னர் பொலிஸாரால் பிடிக்கப்பட்டு 99 வருட தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் தனது 70வது வயதில் ஹெபடைட்டிஸ் நோயால் 1998ஆம் ஆண்டு இறந்துபோனான்.

Ruth Eisemann-Schier

 

 FBI ஆல் தேடப்பட்ட முதல் பெண்குற்றவாளியாக பட்டியலில் சேர்க்கப்பட்டார். தனது 26வது வயதில் கல்லூாரயில் படிக்கும் போது இவரும் இவரது காதலரும் Barbara Jane Mackle என்ற 20 வயது  செல்வந்த வீட்டு கல்லூரி மாணவியைக் கடத்தி கப்பம் கேட்டார்கள். பின்னர் அந்த கல்லூாரி மாணவி நிலத்தில் இருந்து 1 1/2 அடி ஆழத்தில் உள்ள ஒரு பெட்டியில் பத்திரமாக மீட்கப்பட்டார். இவரது காதலர் கிரிஷ்ட் கொஞ்ச நாட்களில் பொலிஸாரால் சிறைபிடிக்கப்பட்டார். இவர் 2 மாதங்கள் தலைமறைவு வாழ்கை வாழந்து பின் சரணடைந்து தன் குற்றத்தை ஒப்புக் கொண்டதோடு தன் காதலரின் தூண்டுகோலால்லால் தான் இதை செய்ததாகவும் கூறியிருக்கிறார். சில வருடங்கள் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து பின்னர் ஹொண்டோரஸ் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டார்.

 

Daniel Andreas San Diego


தீவிரவாத பட்டியலில் சேர்ந்த முதல் அமெரிக்கன் என்ற பெருமை இவனையே சாரும். ஏப்ரல் 2009 சான் பிரான்ஸிஸ்கோவில் இரண்டு கட்டிடங்களுக்கு குண்டு வைத்து தகர்த்தான். இன்னமும் தேடப்பட்ட்டு வருகிறான்.

James "Whitey" Bulger

 

 அமெரிக்கா பில்லா... கடத்தல், கொலை,  ஹவாலா போன்ற வழக்குகளிற்காக தேடப்பட்டு வருகிறான். ஒசாமாவிற்கு அடுத்ததாக தேடப்பட்டு வருகிறான்.  அதிக வயதில் தேடப்பட்டு வருகிறான்(1999ம் ஆண்டு 69 வயது) என்ற பெருமை இவனையே சாரும் . இவனது தலைக்கு 2 மில்லியன் ரூபா விதிக்கப்பட்டுள்ளது.

Juan Garcia Abrego


போதைப்பொருள் கடத்தல் மன்னன்... மெக்‌ஸிகோவிலிருந்து 15 டான் கொக்கையின் கடத்தியுள்ளான். அமெரிக்காவால் தேடப்பட்டவருபவர்கள் பட்டியலில் 1995 ஆண்டில் இடம்பெற்ற முதலாவது போதைக்கடத்தல் மன்னன்.  1996ஆம் ஆண்டு பிடிக்கப்பட்டு 11 ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் உள்ளான்.

நன்றி :- Time.com..



Sunday, May 1, 2011

ஓசாமா கொலை.. முடிவற்ற பயணம்...




உலகத்தின் மிகவும் பலமும் பயங்கரமும் மிக்க ஒசாமா பின்லேடனை தாங்கள் கொன்றுவிட்டோம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று ஒபாமா வெளியிட்ட அறிக்கையில் "..இதுவரை அல்குவைதா இயக்கத்தை அழிக்க எடுக்கப்பட்ட முயற்சியில் மிகவும் முக்கியமான வெற்றி.."


அவர் மேலும் கூறுகையில் "..இஸ்லாமாபாடிற்கு வடக்கே அபொட்டாபாட் என்ற இடத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க இராணுவம் குழுக்களாக சென்று தாக்கி கொன்று. அவரது உடலையும் கைப்பற்றி உள்ளதாக அறிவித்துள்ளது.."

இந்த தாக்குதலிற்கான வீடியோ ஆதாரத்தையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது.  இதை வௌ்ளை மாளிகைக்கு வெளியில் நின்று பாரத்த மக்கள் ஆரவாரம் செய்தனர்.

ஏற்கனவே பலமுறை பின் லேடனைத் தாங்கள் கொன்று விட்டதாக அமெரிக்கா கூறிவந்தது உண்மை. அவ்வாறு கூறி கொஞ்ச நாட்களில் ஒசாமாவிடமிருந்து டேப் வருவதும் வாடிக்கை . இந்த முறை என்னவோ தெரியவில்லை. ஆனால் அவ்வாறு உண்மையில் கொன்றிருந்தாலும் என்னைப் பொறுத்தவரைக்கும் அமெரிக்கா மார்தட்டி கொள்வதற்கு ஒன்றுமில்லை. பின்லேடன் ஏற்கனவே கிட்னி பிரச்சினையில் உடல் நலக்குறைவில் அவதிப்பட்டிருந்தான்.

சோவியத் ரஷ்யாவை எதிர்க்க அமெரிக்காவால் உருவாக்கப்பட்மவன்தான் இந்த பின்லேடன். வளர்தத கடா மார்பில் பாய்ந்த கதை இதற்குத்தான் நன்றாக பொருந்தும். சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின் அமெரிக்கா தனிப்பெரும் வல்லரசாக வளர்ந்து மற்றைய நாடுகளை சுரண்ட ஆரம்பித்தது. இதை எதிர்க்க பின் லேடன் பயங்கரமான செயல்களை செய்துள்ளான். பல அப்பாவி மக்களைக் கொன்றிருக்கிறார்தான்.  ஆனால் அதற்கு அமெரிக்கா ஏகாதிபத்தியத்தும் அதற்கு சளைத்ததில்லை எனபது உண்மை.


மீண்டும் எத்தனையோ பின்லேடன் உருவாகலாம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கலாம். அல்கைதா விடுதலைப்புலிகளைப்போல ஒரு நாட்டில் மட்டும் நின்று போராடிய இயக்கம் இல்லை. அமெரிக்க ஏகாதிபபத்தியம் இருக்கும் வரை பின்லேடன்கள் இருப்பார்கள்.

கனவாய்ப்போகுமோ என்று...




லையும் உயிர்கள் வாழும்
பூமியிது பெருவெளியாம் - நிலை
குலையும் நாங்கள் வாழும்
வாழ்க்கை ஒரு சிறு சிறையாம்

ருவறை சிறை - போனபின்
கல்லறைசிறை - தோல்வியால்
இலட்சியம் சிறை - வெற்றிக்குப்பின்
அலட்சியம் சிறை - நாமில்
நான் சிறை - பூமிக்கே 
வான் சிறை...


வாழும் பிறப்பிது - ஒரு
முறைதான் - அதில்
உருவாக்கும் சிறைகள்தான்
எத்தனையோ..??

ன்றொரு நாள்
நாமிலொரு நீ போகும் - குடும்ப
வாழக்கையின் துயர்தேடி
நானும் போக விரும்புகிறேன் - தேடாத
வாழ்க்கையின் வேர்தேடி



வாழ்ந்திட துடிக்கிறேன் - தினமொரு
முறை பிறந்திட நினைக்கிறேன் - ஆனால்
நிதமும் பதைக்கிறேன் - கனவென
இவை ஆகுமோயென்று....


-மோனி...





Friday, April 29, 2011

வானம் - எல்லையற்றது...




வாசகர்கள் கவனத்திற்கு... இது வானம் படத்தின் விமர்சனம் அல்ல... மாறாக அதன் பாதிப்பால் ஏற்பட்ட பிதற்றல்...


பெரிய எதிர்ப்பாரப்புகள் ஏதும் இல்லாமல்தான் நான் படம் பாரக்க போனேன். ஆனால் ஒரு கனத்த மனத்துடன் திரும்பி வந்தேன். அது ஒரு திரைப்படம் என்று என் அறிவு ஏற்றுக்கொள்ள என்னால் இதுவரை முடியவில்லை. எல்லா விதத்திலும் அற்புதம்.

ஸ்டிஆர் என்று டைட்டில்ல போடும் போது எனக்கு பெரிதாக பிடிக்கவில்லை. இவ்வளவு பந்தா தேவைதானா என்று யோசிச்சன். ஆனால் சிம்பு.. நீங்க இந்த படம் நடிச்சதுக்கு எவ்வளவு பந்தா வேணும் என்றாலும் போடலாம்..

தீவிரவாதம், பகட்டு, அதிகார வெறி, சுயநலம், அறியாமை, இயலாமை போன்று இந்த உலகத்கில் ஊடுறிவிப்போன விடயங்களை நன்றாக சொல்லி இருக்கிறார். தற்கால சினிமாவில் ஒரு சிறிய விடயத்தை எடுத்து அதை மையப்படுத்தி விறுவிறுப்பான திரைக்கதை அமைக்கப்படும். ஆனால் மனித முதிர்ச்சிக்கு இதுவரை கிட்டாத விடயங்களை நன்றாக கையாண்டுள்ளார் இயக்குணர்.. அதை நெஞ்சுருகும் வித்த்தில் கொடுத்தும் உள்ளார்.

ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தை, அனுஷ்காவிற்கு கூட வரும் அரவாணி, லாரி ஓட்டுற சிங், கடைசியாக டிராக்டர் நம்பர் பிளேட்டில் கணக்கு போடும் சிறுவன் என்று ஒவ்வொரு விடயங்களையும் நன்றாக பார்த்து பார்து செதுக்கியுள்ளார் இயக்குணர்.

நடிப்பு சொல்லவே தேவையில்லை.. சிம்பு, பரத். பிரகாஷ்ராஜ், சரண்யா, அனுஷ்கா என்று எல்லாரும் கதைக்குள்ள ஒன்றிக்க வைத்துவிட்டனர்.

தமிழ் சினிமாவின் மசாலா பாணி பல இடங்களில் தெரிந்தாலும். அது மிகவும் நகச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்திச்சு...

படம் முழுக்க சிம்புதான தெரிவதுதான் சிம்பு பட வழக்கம். ஆனால் இதில எல்லாருக்கும் வாய்ப்பு இருந்திச்சு... இசையில யுவன் பிச்சிட்டாரு. அதுவும் "வானம்..." பாட்டு ஒவ்வொரு முறை ஒலிக்கும் போது அது மனசை தொடுகிறது. நிரவ்ஷாவின் கமராவைக் கவனிக்க முடயாத அளவிற்கு கண்கள் சில நேரம் கலங்கி போகிறது. அதிலயும் திருடிட்டு போன காசை சிம்பு மறுபடியும் கொடுக்கிற காட்சி அற்புதம்...

படத்ததில் குறைகள் இருக்குது... ஆனால் அதை கிளைமாக்ஸிற்காக கண்டுக்காம விடலாம். அன்பே சிவம், ரங் டீ பஸந்தீ (ஹிந்தி) போன்ற படங்களின் கிளைமாக்சிற்கு நிகரான நெஞ்சைத்தொடும் கிளைமாக்ஸ்...

அதிலயும் கடைசியா அனுஷ்கா சொல்ற டயலொக்..
"எப்படியும் வாழலாம் எண்டிருந்த எங்க வாழ்ககையை ஒரு நல்ல சாவு இப்படித்தான் வாழனும் என்று காட்டிருச்சு.." சூப்பர்..




வானம்.. என்றுமே எல்லையற்றது....

Tuesday, April 26, 2011

என் சிறு கவிதைகள்...





(இது நான் எழுதி சிறு கவிதைகளின் ஒரு சிறு தொகுப்பு...)

கடைக் கண்ணாடிகளில் 
விழுமெம் விம்பத்தை 
இரசிக்கிறோம்...
எம்மை விட 
அதிகமாக...
---------------------------------------------------------------------
பூமியில் உள்ளதாடா சொர்க்கம்
அடக்கி வைத்த மூத்திரத்தை
பெய்து பார் - அப்போது தெரியும்...
---------------------------------------------------------------------

அம்மாவை விடவும்
சொர்க்கமொன்று உண்டென்றால்
எவ்வளவு உன்னதமானது
அது...
---------------------------------------------------------------------
அண்ணாந்து வானம் பாரத்து 
நிம்மதியடைகிறேன் - இன்னமும்
மேலே இடம் உள்ளது...
---------------------------------------------------------------------
'இதுவும் போய்விடும்...' என்றெழும்
கவிஞனும் காசுக்குத்தான்
எழுதுகிறான்.....





Sunday, April 24, 2011

இனி என் பெயர் பிரேம சாய்பபாபா...




தனக்கு மரணமே இல்லை. தான் கடவுள் என்றும். தான் இந்தப் பிறவியில் போனதும் மீண்டும் கர்நாடக மாநிலத்தில் பிரேம சாய்பாபா என்ற பெயரில் அவதரிப்பேன் என்று சத்திய சாய்பாபா கூறியிருந்தார்.
இதனால எத்தனை பெற்றோர் தங்களுடைய குழந்தையை தூக்கிட்டு பிரேம சாய்பாபா என்று கிளம்பபோறாங்களோ தெரியேல்ல.

ஆனா பாருங்க இதுதான் பிரேம சாய்பாபாவாம்... பார்க்க என்னை மாதிரியே இருக்கு என்று நண்பர்கள் சொல்றாங்க



அதனால முன்கூட்டியே எச்சரிக்கையாக ஒரு விண்ணப்பத்தை நானும் போட்டு வைக்கிறன்.

பின்ன வெட்டிய உட்காந்திக்கிட்டே தின்கிற யோகம் யாருக்கு கிடைக்கும். அந்த யோகம் எனக்கு கிடைக்காதா.

ஏன்பா கழுதை ஏதாவது இருக்கா...??

Saturday, April 23, 2011

மயிர்ச்சடையானவர்க்கே மடங்கள் உண்டாக்குகிறோம்....




ஒரு மனிதனின் மரணத்தை வைத்து விமர்சனங்களை வெளியிடுவது தவறானதுதான் ஆனால் நேற்று நடந்த சம்பவம் என்னை இந்த பதிவை எழுத வைத்துவிட்டது. இது யார் மனதையேனும் பாதிக்குமேயானால் என்னை மன்னிக்கவும். ஒரு மனிதனைப்பற்றி விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை.

 நேற்று எனக்கு தெரிந்த உறவினர் வீட்டை போயிருந்தேன். அவர் தீவிர சாய் பாபா பக்தர். அவர் வீட்டில் கடந்த சில மாதங்களாக கடன் தொல்லையால் மிகுந்த பிரச்சினையில் உள்ளார். நேற்று வழமையை விட கவலையாக இருந்தார். ஏன்.. சாய்பாபாவின் உடல் நிலை மோசமாகிவிட்டது அவரை மருத்துவர்கள் கைவிட்டுவிட்டார்கள். எப்படியாவது போய் புட்டபத்தியில் பார்க்க ​வேண்டும்.

சாய்பாபா என்ற ஒரு தனிமனிதன், அவர் அப்படி என்ன சாதித்துவிட்டார். சாய் பக்தர்களை கேட்டால் சொல்வார்கள்.. "அவர் கடவுளாக வாழ்ந்தவர்.." என்ன கொடுமை இது... கடவுள் என்ற கருப்பொருளே இல்லை என்று விஞ்ஞானம் நீரூபிச்சிட்டு வருது இதில மனிதன் கடவுளா...??

நான் மறுக்கவில்லை எத்தனையோ மனிதர்கள் மக்கள் மத்தியில் கடவுளாக வாழ்கிறார்கள் காந்தி, மண்டேலா போன்ற பலர் உள்ளார்கள்தான். அவர்கள் தங்கள் வாழ்க்கையே மக்களுக்காக அர்பணித்தவர்கள்... அப்படி ஒரு தியாகத்தையும் பாபா செய்துவிடவில்லை...



சாய் டிரஸ்ட் பண்ட் எத்தனையோ ஏழை மக்களின் மருத்துவ கல்வி செலவிற்கு உதவியுள்ளது என்று பலர் மார் தட்டுகிறார்கள்.
சாய் பாபா தன்னுடைய சொந்த காசில இருந்தா செய்தார். மக்கள் கொடுத்த காசை மக்களுக்கே கொடுக்கிறது எப்படி பெருமை. அவர் பல சித்துகள் செய்தாராம்... சித்துகள் செய்துவிட்டால் கடவுள் ஆகிவிடுவாரா...?? இப்படித்தான் வாயில இருந்து லிங்கம் எடுக்கிற எத்தனை பேரிடம் ஏமாந்து போனோம்.


"சாயின் உடல் நிலைக்காக பக்தர்கள் வீசேட பிரார்த்தனை...".. என்ற செய்தியை பத்திரிக்கையில் வாசித்து மிகுந்த வருத்தப்பட்டேன். ஒருமனிதன் தன் அந்திம காலத்தில் போய் சேரவேண்டிய நேரத்தில் போய் சேருகிறார். அதைத் தடுக்க சோகமாக  பெரிய பிரார்ததனைகள்... ஆனால் இங்கே ஈழத்தில் எத்தனையோ இளம் பிஞ்சுகள் பலியிடப்பட்ட போது யாருமே பேசவில்லை...  அப்போது உங்கள் பிரார்த்தனைகள் எங்கே...??

இது எனக்கு ஜெயகாந்தனின் ஒரு கவிதை ஞாபகம் படுத்துகிறது....

நடந்தும் பிறந்தும் ஓடியும் ஊர்ந்தும்
                  நாமெலாமிங்கு அலைகின்றோம்
இடந்தெரியாமல் முகம் தெரியாமல்
                 எவரையோ இங்கு தேடுகின்றோம்
தடமென ஒன்றுமில்லை நடந்து நடந்து
                 தடங்கள் உண்டாக்குகின்றோம்
இடமென ஒன்றுமில்லை இருந்து - இருந்து
                 இடங்கள் உண்டாக்குகன்றோம்
விடமென ஒன்றுமில்லை வெருண்டு வெருண்டு
                 விடங்கள் உண்டாக்குகிறோம்
மடமென ஒன்றுமில்லை மயிர்ச்சடை யானவர்கே
                 மடங்கள் உண்டாக்குகிறோம்....