Friday, February 18, 2011

Forrest Gump - உணர்வுகளின் கலவை




உயிர்ப்போட்டமான சினிமாக்களை இரசிப்பதென்பது தமிழ் இரசிகர்களுக்கு எருமை மாட்டை தண்ணீரில் வைத்து விலைபேசுவது போன்றாகிவிட்டது. அந்த வகையில் ஒரு உயிர்ப்போட்டமான திரைப்படத்தின் விமர்சனம் என்று இல்லாமல் விம்பத்தை பிரதிபலிக்கும் இந்தக் கட்டுரையில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


உயிர்ப்போட்டமான சினிமாக்கள் பல உண்மையின் விம்பத்தை பிரதிபலிக்கும் போது மிகவும் மெதுவான திரைக்கதையையோ, படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒரே உணர்வை அதுவும் சோகத்தை சுமந்ததாகவே காணப்படும். வாழ்க்கையின் அழுத்தத்தை தொலைக்க முயற்சிக்கும் பலருக்கு இந்த படங்களை பார்ப்பதென்பது கல்லைத் திண்பது போல. ஆனால் Forrest Gump 1994ம் ஆண்டு வெளிவந்து சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட ஆறு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது மட்டுமல்லாமல் சினிமா வியாபார குணாதியசங்களை உயிர்ப்பான முறையில் வௌயிட்ட திரைப்படமாகும். ஒரு திரைப்படம் வியாபார ரீதியகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறுவதென்பது மிகவும் அபூர்வான நிகழ்வாகும். அந்த அபூர்வத்தில் இந்த திரைப்படமும் ஒன்றாகும். ஆறு ஆஸ்கார்களை மட்டுமல்லாது இதுவரை ஹாலிவூட் சினிமாவில் வெளிவந்த திரைப்படங்களுள் அதிக வசூல் பெற்ற திரைப்படங்களில் 21ஆவது இடத்தை பிடித்துள்ளது.
Robert Zemekics

Tom Hanks
Robert Zemekics இயக்கி Tom Hanks நடித்த இப்படம் 1986ம் ஆண்டு Winston Groom என்ற நாவலாசிரியரால் எழுதப்பட்ட Forrest Gump என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டதாகும் ஹாலிவூட் சினிமாவின் சராசரி இரசிகர்களுக்கு Tom Hanks, Robert Zemekics எந்த வகையிலும் புதியவர்கள் இல்லை. Back To The Future என்ற சினிமா வராலாற்றின் முக்கிமான திரைப்படத்தை எழுதி இயக்கிய பெருமை Robert Zemekicsயே சாரும். அதேபோல 1993 வெளிவந்த Philadelpia திரைப்படத்தில் Tom Hanksன் நடிப்பை யாரும் மறக்க மாட்டார்கள். அந்த திரைப்படம் அவரிற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை பெற்றுத் தந்தது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். தமிழ் சினிமாவில் வெளிவந்த நியூ திரைப்படத்தின் கருப்பொருள் Tom Hanks நடித்த Big திரைப்படத்தில் இருந்து கருப்பொருள் எடுக்கப்பட்டதாகும்.

ஒரு பறவையின் இறகு வானத்திலிருந்து மெல்ல மெல்ல விழுந்து ஒரு பூங்காவில் கதிரையில் இருக்கும் ஒரு மனிதன் மீது விழுகிறது. அதை எடுத்து அந்த மனிதன் தன்னுடைய புத்தகத்தில் பத்திரப்படுத்திக்கொள்கிறார். அந்த மனிதர்தான் கதையின் நாயகன் Forrest Gump. IQ மிகக்குறைந்த ஒரு நபர் தனது பள்ளிப்பருவம் முதல் அந்தக்கணம் இளைஞன் ஆகும் வரை சந்திக்கும் அனுபவங்களின் தொகுப்பே இந்த திரைப்படம்.

அட.... இந்த திரைப்படத்தில் என்ன அப்படி இருக்கு இப்படி எல்லாம் பீடிகை போட்டேன் என்று நினைக்கிறீர்கள் போல இருக்கு. அவசரப்படவேண்டாம்... இநத திரைப்படத்தின் தன்மையை மாற்றியது Tom Hanks ன் அசர வைக்கும் நடிப்பும் மிகவும் நுட்பமாக செதுக்கப்பட்ட திரைக்கதையும் ஆகும். "Stupid is what stupid does.." என்ற வசனம் தனது வாழ்க்கையின் பல இடங்களில் உபயோகிக்கும் நாயகன் இந்த வார்த்தைகளிற்கு பல வர்ணங்கள் தீட்டும் அழகும் இந்த படத்தின் குறிப்பிட வேண்டிய சிறப்பம்சம்.

மிகவும் மக்கான Forrest பள்ளிப்பருவத்தில் மிகவும் ஒதுக்கப்பட்ட ஒருவனாக காணப்பட்டான். பள்ளிப் பருவத்தில் இவனுக்கு துணையாக இருப்பது அவனது அம்மாவும், அவன் நண்பி Jennyம் ஆகும். சிறுவயதிலிருந்தே Jenny மீது அவனிற்கு ஒரு இனம் புரியாத  உணர்வு வளர்ந்துகொண்டு வந்தது. ஆனால் அவளோ தன் தந்தையாலேயே பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டிருந்தாள். இதனை புரியும் பக்குவமோ அறிவோ அவனிற்கு இருக்கவில்லை.


ஆனாலும் இருவரது உறவும் கல்லுாரி வரை தொடரந்தது. அங்கே இவனது மின்னல் போல ஓடும் திறமையால் American Football அணியில் விளையாடும் வாய்ப்பை பெறுகிறான். இதனால் ஜோன் கென்னடியை சந்திக்கும் வாய்ப்பை பெறுகிறான். JFK யை சந்திக்கும் வண்ணம் எடுக்கப்பட்ட காட்சிகள் மிகவும் தத்தரூபமாக எடுக்கப்பட்டிருக்கும். இந்த திரைப்படம் கென்னடி சுடப்பட்டு இரண்டு தசாப்தங்களிற்கு பின் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லுாரியின் முடிவில் Forrest வியட்நாம் யுத்தத்தில் பங்கேற்க செல்கிறான். அங்கே அவன் வாழ்கையின் இரண்டாவது நண்பனை சந்திக்கிறான். Bubba என்ற கறுப்பின இராணுவ வீரனுடன் நட்பு கொள்கிறான். அடிமைத்தனத்தை பிறப்புரிமையாக கொண்டு வளர்ந்த அவனது நண்பனிற்கு வாழ்க்கை விடுதலை என்பதே இலக்காக காணப்பட்டது. இருவரும் இணைந்து இறால் பிடித்து விற்பனை செய்வது பற்றி திட்டமிடுகிறார்கள். இராணுவத்திலிருந்து கிடைக்கும் பணத்தை வைத்து யுத்தம் முடிந்த பின்னர்  அதை செய்வோம் என்று நண்பனிற்கு Forrest சத்தியம் செய்கிறான். ஆனால் வியட்நாம் யுத்தத்தில் ஒரு கொரில்லா தாக்குதலில் அவன் நண்பன் இறந்து போகிறான். Bubbaவின் இறுதி நிமிட காட்சிகள் கண்கலங்கவைக்கும். அதுவும் முக்கியமாக I want to go home... என்ற அவனது வார்த்தைகள் மறக்க முடியாதைவையாகும். அந்த கொரில்லா தாக்குதலில் காயப்பட்டிருந்த தன் படை பொறுப்பதிகாரியை அவன் காப்பாத்துகிறான். இருந்தாலும் அவரின் இரு கால்களையும் அவன் இழக்கிறார்.

யுத்தத்தின் பின்னர் நாட்டிற்கு திரும்பும் Forrest மீண்டும் Jenny ஐ சந்திக்கிறான். ஆனால் இந்த முறை அவள் ஒரு டிஸ்கோ அரங்கில் உடைகளை களைந்து ஆடும் Stripper ஆயிருந்தாள். ஆனால் அவளின் நிலையைப் புரிந்துகொள்ளும் அறிவு அவனிற்கு இருக்கவில்லை. கொஞ்ச காலம் இவனுடன் இருக்கும் அவள் அவனை விட்டு வேறொருத்தனுடன் செல்கிறாள்.

 தன் நண்பன் Bubba விற்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற இறால் பிடிக்கும் தொழிலிற்கு புறப்படுகின்றான். அப்போது அவனால் வியட்நாமில் காப்பாற்றப்பட்ட படைப்பொறுப்பதிபாரியும் இணநை்து பெரு வெற்றி பெறுகிறார்கள். அதனைத் தொடர்ந்து அவன் அம்மாவும் இறக்கிறாள். கவலையைக் கூட புரிந்துகொள்ள முடியாமல் Tom Hanks ன் நடிப்பு அற்புதம்.


பின் வீட்டிலிருந்து எந்தக் காரணமும் இல்லாமல் நாடு கடந்து ஓடுகின்றான். அதன் மூலம் பிரபல்யமைடைகிறான்.  இதைக் கண்ட அவன் காதலி என்ன செய்கிறாள் என்ன என்பதே படத்தின் கிளைமாக்ஸ். என்ன இவ்வளத்தையும் சொல்லிட்டு கிளைமாக்ஸை சொல்வில்லை என்று யோசிக்கிறீங்களா..??

கிளைமாக்ஸ் பார்த்துக் கொண்டிருக்கும் போது என் கண்களில் கண்ணீர் கண்டேன். நீங்களும் அதை உணரவேண்டும் என்றால் நீங்கள் இந்தப் படத்தை நீங்கள் பாரக்கவேண்டும். முதல் வேலையாக இந்தப்படத்தை எடுத்து பாருங்கள்....



கண்ணீர், கவிதை, சரித்திரம், சிரிப்பு, சிந்தனை என்று பல வர்ணங்களை சுமந்து வந்த இந்தப்படம் உண்மையில் உலக சினிமா வரலாற்றில் முக்கியமான படமாகும். தமிழ் இரசிகர்கள் சரியான மசாலா படம் பார்க்க வேண்டும் என்றால் இதைப் பாருங்கள்......

-மோனி....(மோகனரங்கன்)

1 comment: